![]() |
நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு
உலகின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் புலிகள் பாரிய
வலையமைப்பினூடாக செயற்படுகின்றனர். வெவ்வேறு முகங்களுடன் இவர்கள்
முன்னெடுக்கும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு
மக்களுக்கும் உலகிற்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு
என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
பயங்கரவாதத்தை தாய் நாட்டிலிருந்து துடைத்தெறிந்தாலும்
பெற்றுக்கொண்ட வெற்றியை மீள அபகரித்துக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும்
செயற்பாடுகளுக்கு நாம் முகம்கொடுக்கவேண்டியுள்ளது எனவும் இவ்வாறு
செயற்படுபவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப்
படையினரின் நினைவாக அநுராதபுரம் மிஹிந்தலையில் நிறுவப் பட்டுள்ள நினைவுத்
தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுத்தூபி ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, மாகாண ஆளுநர்கள்,
மாகாண முதல்வர்கள், முப்படைத் தளபதிகள், உட்பட அமைச்சு அதிகாரிகள் மற்றும்
சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர் பெருமளவில் கலந்துகொண்ட
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இராணுவம்,
பொலிஸைப் போன்றே சிவில் பாதுகாப்புப் படையினரும் தமது உயிரை பணயம் வைத்துப்
போராடினர். கெப்பிட்டிக்கொல்லாவயில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் நாம் மறக்க
முடியாதது.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாம் உடனடியாக இங்குவந்து
பாதிக்கப்பட்ட மக்களிடம் சுகதுக்கம் விசாரித்தோம். ஏனைய மக்களை ஆறுதல்
படுத்துவதிலும் ஈடுபட்டோம்.
அதுவரை காலமும் சிவில் பாதுகாப்புப் படையினர்
உதாசீனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. நாம் அவர்களுக்கு சிறந்த
பயிற்சியளித்தோம். அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுத்து
அவர்களையும் பலமுள்ள படையினராக உருவாக்கினோம். அவர்களுக்கான பொறுப்பை
பாதுகாப்புச் செயலாளர் ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்மூலம்
கிராமங்களினதும், பிரதேசத்தினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன்
கிராமங்களை விட்டுவிட்டு வெளியேற முற்பட்ட மக்களை தடுத்து அவர்களுக்கு
முழுமையான பாதுகாப்பையும் அவர்கள் வழங்கினர்.
எல்லைக் கிராமங்களிலுள்ள மக்களை அங்கிருந்து
துரத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டனர். அவர்களைத் தெற்குப் பக்கம்
துரத்த எண்ணினர். எனினும், நாம் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு
பயிற்சிகளை வழங்கியிருந்ததால் அவர்கள் அதனைத் தடுத்தனர்.
நாட்டை மீட்கும் வெற்றியின் பங்காளர்களாக சிவில்
பாதுகாப்புப் படையினர் திகழ்கின்றனர். மனிதாபினமான நடவடிக்கையின்போது 525
படையினர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அதேவேளை சிங்கள, முஸ்லிம்
மக்களும் உயிரிழந்துள்ளனர். தாய்நாட்டை மீட்பதற்காகவே அவர்கள் இந்தத்
தியாகத்தைச் செய்துள்ளனர்.
எமது தாய்நாடு மீட்கப்பட்டு அபிவிருத்தியில்
கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக முன்னேற்ற
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இந்த மண்ணில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும்
உலகின் சகல பகுதிகளிலும் பலமான வலையமைப்பின் மூலம் நாட்டுக்கு எதிரான
செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வெவ்வேறு போர்வையில் வெவ்வேறு
விதங்களில் அவை இடம்பெற்று வருகின்றன. எமது தாய் நாட்டையும் நாம்
ஈட்டியுள்ள வெற்றியையும் சீர்குலைப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.
புலம்பெயர் தமிழர் அமைப்பு என்ற பெயரில் இயங்குகின்றனர். நான் அந்தப்
பெயரைக்கூடக் கூறுவதற்கு விரும்பவில்லை. அறந்தலாவை சம்பவம் குண்டுவெடிப்புச்
சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
இலங்கையில் கால்வைக்காத, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிராத இரண்டாம் மூன்றாம்
பரம்பரையினர் தவறாகத் திசைதிருப்பப்பட்டு தவறாக செயற்படுகிறார்கள்.
இவர்களுக்குப் பக்க பலமாகச் செயற்படும் அமைப்புக்கள் எமது
வெற்றியை எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அபகரிக்கப் பார்க்கின்றன. இத்தகைய
நிலையில் நாம் மிக அவதானமாகச் செயற்படவேண்டும். கவனமாக நிர்வாகம்
செய்யவேண்டும். இதுதொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பொறுப்பு
அனைவருக்கும் உள்ளது. எமது படையினரும் பொலிஸாரும் பெரும் தியாகங்களுடன்
பெற்ற வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
சில மாவட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த
அபிவிருத்தியை நாம் நாட்டின் சகல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம்.
நாட்டின் சகல திசைகளுக்கும் சென்றுபார்த்தால் இது புரியும்.
மூன்று தசாப்த காலம் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட
அபிவிருத்திக்கான பின்னடைவு தற்போது சரிசெய்யப்பட்டு வருகிறது. அந்த
மக்களின் எதிர்கால வாழ்வுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் நாம்
பின்நிற்கப்போவதில்லை. அம்மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கான விசேட
செயற்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
தாய் நாட்டைக் கட்டியெழுப்பவும், அதனைப் பாதுகாக்கவும்
நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். நாட்டை சீர் குலைப்பதற்கு நாம் ஒருபோதும்
இடமளிக்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்


