காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தினை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடை முறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பொருளாதார மத்திய நிலையங்களிலிருந்து கொழும்பு விற்பனை நிலையங்களுக்கு பாரிய அளவில் லொறிகளில் எடுத்துவரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கே ஜனவரி 15 ஆம் திகதி முதல் இச்சட்டம் அமுல்படுத்தப்பட விருப்பதாக உள்ளூர் வர்த்தகத் துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் கூறினார்.
அரசாங்கத்தினால் ஏற்கனவே அமுல் படுத்தப்பட்டிருந்த மேற்படி சட்டமானது விவசாயிகள்- வியாபாரிகள்- விற்பனை முகவர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கேட்டுக் கொண்டதற்கமைய சில காலம் நடைமுறைப்படுத்தப்படாது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சில சலுகைகளுடன் மேலும் இச்சட்டத்தை அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.
இதன்படி- விவசாயிகள் தாம் விரும்பிய வகையில் தமது உற்பத்தியை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவர முடியும். பொருளாதார மத்திய நிலையங்களிலிருந்து கொழும்பிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு பாரியளவில் லொறிகளில் எடுத்துவரப்படும் காய்கறிகள் மற்றும் பழவகைகளுக்கு மாத்திரமே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் பிளாஸ்டிக் கூடைகளுக்கு பதிலாக கார்ட்போட் பெட்டிகள் மற்றும் மரப் பெட்டிகளை உபயோகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார மத்திய நிலையங்களிலிருந்து கொழும்பு விற்பனை நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி அல்லது லேண்ட்மாஸ்டர்களில் சிறியளவில் எடுத்து வருவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
