தென் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் குழுவொன்று, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து மற்றொரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டுள்ளதாக இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்பீ திசாநாயக்க குற்றம் சாட்டினார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் திசாநாயக்க உரையாற்றினார்.
ஜேவீபீயில் இருந்து பிரிந்து இயங்கும் குழுவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள அந்த மாணவர்கள், விடுதலைப் புலிகளுடன் முன்னர் தொடர்பு கொண்டிருந்த இளைஞர்களைத் தேடி யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்களென அவர் குற்றம்சாட்டினார்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு 57.3 கோடி ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும், அங்கு நிலவும் மாணவர் தங்குமிடப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.
சிங்கள மாணவர்கள், அவர்களது பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் குடியேற்றங்களை அமைக்கும் நோக்குடன் அல்லவெனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்பி திசாநாயக்கவின் இன்றைய பயணத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்தினுள் இன்றைய தினம் சென்ற அனைத்து மாணவர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டார்கள்.

