கோதபாயவிற்கும், பெசிலிற்கும் இடையில் முரண்பாடு – விக்கிலீக்ஸ்

கோதபாயவிற்கும், பெசிலிற்கும் இடையில் முரண்பாடு – விக்கிலீக்ஸ் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களான கோதபாய ராஜபக்ஷவிற்கும், பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அநேக சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷவும், தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவும் அநேக சந்தர்ப்பங்களில் பொது நிகழ்வுகளில் ஒன்றாகத் தோன்றுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சில சந்தர்ப்பங்களில் இருவரும் ஜனாதிபதிக்கு முரண்பட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2007ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளரும், முன்னாள் இலங்கைக்னான அமெரிக்க தூதுவருமான ரொபர்ட் ஓ பிளக்கினால் இந்தத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 
உதாரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளுக்காக பசிலும், கோதபாயவும் இரு வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க விரும்பியதாகக் கோரியுள்ளனர்.
 
இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோதபாய ஆகிய இருவரும் பரிந்துரை செய்த நிறுவனங்களுக்கு நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்வதனை கோதபாய விரும்பாத அதேவேளை, பசில் ராஜபக்ஷ விரும்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஜே.வி.பியுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டுமென்பதே கோபதயாவின் விருப்பமாக அமைந்திருந்தது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ கொண்டிருந்ததாகவும், இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை கோதபாய ராஜபக்ஷ கொண்டிருந்ததாகவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now