
மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்துடன் இந்திய ரூ.150 கோடியில் புதுப்பிக்கப்பட்டு புதிய வடிவில் இயங்கி வருகிறது.
இங்கு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு, சுங்க வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் மதுரைக்கு விமான போக்குவரத்து துவங்குவதில் சர்வதேச விமான நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவம்சத்தை, டெல்லியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது இலங்கையிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை துவக்க வலியுறுத்தினர். இந்நிலையில், இலங்கை தூதர், மாணிக்கம் தாகூர் எம்பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மதுரைக்கு சர்வதேச விமானம் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய இலங்கை விமான சேவை நிறுவன அதிகாரிகள் இந்த வாரம் மதுரை வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் முதல் விமானத்தில், தானும் மதுரை வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை - மதுரை விமான போக்குவரத்து தொடர்பாக இரு நாடுகளிடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதேபோல், அரபு நாடுகளிலிருந்தும் மதுரைக்கு விமானம் இயக்குவது தொடர்பாக அந்த நாடுகளின் விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜித்சிங்கை, மாணிக்கம் தாகூர் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.