அரசாங்கத்தின்
தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மற்றும்
வாழ்க்கை செலவு அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆர்ப்பாட்டம் மார்ச் 14ஆம் திகதி புதன்கிழமை
பிற்பகல் 3 மணிக்கு ஹட்டன் நகரில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள்
முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி
விக்கிரமபாகு கருணாரட்ன, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க
ஜெயசூரிய மற்றும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.
சதாசிவம் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கு முன்னர் பொது எதிரணியினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு
மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
விலைவாசி உயர்வு மற்றும் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்து
நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, தமது தவறுகளை மறைப்பதற்காக அரசாங்கம்
ஜெனீவா மனித உரிமை மகாநாட்டு விவகாரத்தை பயன்படுத்துகின்றமை தொடர்பில்
மலையக மக்களுக்கு கட்சி தலைவர்கள் விளக்கி உரையாற்றவுள்ளனர்.