மேற்கு வங்காள மாநிலத்தில் பல கிராமங்களில் வறட்சியும், பஞ்சமும் தலை
விரித்தாடுகிறது. அரசியல்வாதிகள் வாய் கிழிய பேசினாலும் இவர்களின் அவல
நிலையை போக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
இதனால் சாராயம் காய்ச்சி விற்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும்
நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. சில கிராம மக்கள் பஞ்சத்தையும்,
பட்டினியையும் சமாளிக்க தங்களது கிட்னியை விற்பனை செய்கின்றனர்.
இதனால் சில கிராமங்களை 'கிட்னி கிராமம்' என்று அழைக்கின்றனர். அந்த
கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், ஒரு கிட்னியுடன் தான் உயிர்
வாழ்கின்றனர். வடக்கு டியாஞ்ச்பூர் மாவட்டத்தில் உள்ள பிந்தால் கிராமம்,
கிட்னிக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும்.
இங்குள்ள மக்களிடம் இருந்து பெறப்படும் கிட்னி மாநில தலைநகர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கிட்னி விற்பனைக்கு ஏற்பாடு செய்வதற்கு என்றே புரோக்கர்கள்
செயல்படுகின்றனர். அவர்கள் கிட்னி ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4
லட்சம் வரை விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், கிட்னி கொடுக்கும் கிராம
மக்களுக்கு சொற்ப தொகையே தருகின்றனர். அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய்
வரைதான் கொடுக்கின்றனர்.
கிராம மக்களின் பசியையும், அறியாமையையும் பயன்படுத்தி புரோக்கர்கள்
லட்சம், லட்சமாக சம்பாதிக்கின்றனர். கிட்னியை விற்கும் இளைஞர்கள் நாளடைவில்
உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலை எதுவும் செய்ய முடியாமலும் போகிறது.
அப்படிப்பட்டவர்கள் பெற்றோர் அல்லது மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை
விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
ஆண்களில் பெரும்பாலானோர் தங்களது ஒரு கிட்னியை விற்று விட்டனர். இதில்
கிடைத்த பணம் கரையத் தொடங்கியதும், தங்களது மனைவியும் கிட்னியை விற்குமாறு
வற்புறுத்துகின்றனர். இப்போது பெண்கள்தான் அதிகளவில் கிட்னியை
விற்கின்றனர்.
தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் இங்கு நடத்திய ஆய்வில், கிட்னியை
விற்ற பலர் சில ஆண்டுகளிலேயே இறந்து போனது தெரியவந்தது. இந்த அவல நிலையை
போக்க தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசை
அந்த தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.