இது ஒன்றுக்கும் உதவாத அரசாங்கம் - மனோவின் மனக்குமுறல்

இது ஒன்றுக்கும் உதவாத அரசாங்கம் - திட்டித்தீர்க்கும் மனோசரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி. அவர் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்று இலங்கையில் இருக்கிறார்கள். இந்த அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பர்மிய இராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து, இலங்கையின் ஜனநாயக ஆட்சியாளர்கள் பாடம் படிக்க வேண்டும்.

அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நாட்டில் எப்படி உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில், இலங்கை ஜனாதிபதி பர்மிய இராணுவ ஆட்சியாளர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பிலான மக்கள் இயக்க கூட்டம் களுத்துறை நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

வண. சோபித தேரர், அனோமா பொன்சேகா, விக்கிரமபாகு கருணாரத்ன, அர்ஜுன ரணதுங்க எம்பி , பாலித தவலப்பெரும எம்பி ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நான் களுத்துறைக்கு பலமுறை வந்து பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசியுள்ளேன். ஆனால் இந்த களுத்துறை நகரசபை மண்டபத்திற்கு ஆறு வருடங்களுக்கு பிறகுதான் வருகிறேன். கடைசியாக போருக்கு எதிரான தேசிய முன்னணியின் கூட்டத்தில் பேசுவதற்காக இந்த மண்டபத்திற்கு வந்திருந்தேன். அன்று என்னுடன் என் நண்பன் ரவிராஜ் வந்திருந்தார். அந்த போருக்கு எதிரான கூட்டத்தை இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர் அன்றைய எதிர்க்கட்சி எம்பி ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்தார்.

இன்று போரை நடத்திய சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்துவதற்காக நான் களுத்துறை நகரசபை மண்டபத்திற்கு மீண்டும் வந்துள்ளேன்.

இதனால் எங்கள் கொள்கை ஒரு அங்குலமும் மாறவில்லை. நான் அன்றும் போருக்கு எதிரானவன்தான். இன்றும் போருக்கு எதிரானவன்தான். இதை பகிரங்கமாக கூறுகின்றேன். எனது கொள்கையும், இங்கே அமர்ந்து இருக்கும் விக்கிரமபாகுவின் கொள்கையும் என்றும் மாறாது. நாம் காலத்திற்கு காலம், வேளைக்கு வேளை கொள்கைகளை மாற்றிகொள்பவர்கள் அல்ல. இதை நினைத்து நாம் பெருமை அடைகிறோம்.

போரின் காரணாமாக எமது தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை சந்தித்து உள்ளார்கள். பெருந்தொகையானோர் கொல்லப்பட்டார்கள். அது தொடர்பாக எங்களிடம் விடைதேடும் பாரிய கேள்விகள் இருக்கின்றன. ஆனால், போரை நினைந்து நாம் அழுதுகொண்டே மாத்திரம் இருக்க முடியாது. காலம் முழுவதும் போரின் அழிவுகளை பற்றி மாத்திரம் பேசி கொண்டே இருக்க முடியாது. ஒரு இனம் என்ற முறையில், ஒரு நாடு என்ற முறையில் நாம் எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உண்மையான தேசிய நல்லிணக்கத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.

எமது கட்சியான, ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்றுகொள்ளும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தகைமை சரத் பொன்சேகாவிடம் இருந்தது என நாம் நம்பினோம். அதனாலேயே அவரை அன்று ஒரு அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பொது வேட்பாளராக நமது கட்சியும் ஏற்றுகொண்டது. அந்த அரசியல் காரணங்களாலேயே அவர் இன்று அரசியல் கைதியாக உள்ளார். ஆகவே அவரது விடுதலை தொடர்பில் எனக்கு ஒரு தார்மீக கடமை இருக்கிறது.

சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் தேசிய இயக்கம் ஆரம்பிக்கும் முன்னர், அனோமா பொன்சேகா என்னிடம் ஒரு பேசினார். சரத் பொன்சேகாவின் விடுதலை என்பது சிங்கள பெளத்த இயக்கமாக இருக்க கூடாது என நான் அவரிடம் அப்போது சொன்னேன். எனவே அதில் நான் தமிழ் பேசும் மக்களின் சார்பாக பிரதிநிதித்துவம் செய்கிறேன் என அவரிடம் வாக்குறுதி அளித்தேன்.

இங்கே எந்த ஒரு தமிழ் பேசும் அரசியல் தலைவரும் கிடையாது. நான் இங்கே வந்துள்ளதால்தான் இது ஒரு தேசிய இயக்கமாக இருக்கின்றது. நான் அளித்த வாக்குறுதியை நான் இன்று நிறைவேற்றுகிறேன். எதிர்காலத்தில் சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய ஆட்சி இந்த நாட்டில் மலரும் போது அதிலும் நாம் நமது மக்களை உறுதியான முறையில் பிரதிநிதித்துவம் செய்வோம்.

இன்று இந்த நாடு மாலுமி இல்லாத கப்பலாக இருக்கின்றது. சரத் பொன்சேகாவின் விடுதலை நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. நமது எதிர்பார்ப்பு சரத் பொன்சேகாவின் விடுதலையுடன் சேர்த்து, அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது ஆகும்.

இன்றைய அரசாங்கம் ஒன்றுக்கும் உதவாத அரசாங்கமாக மாறிவிட்டது. இவர்களின் மகிந்த சிந்தனை வெளிநாட்டு கொள்கை வெறும் கேலி கூத்து. அந்த கொள்கையில் இரண்டே வாசகங்கள் மட்டும்தான் இருக்கின்றன. “ஏதாவது ஒரு உறுதிமொழியை கொடுத்துவிட்டு நாடு திரும்புங்கள். பிறகு பார்த்துகொள்ளலாம்”, என்பதுதான் பிரசித்திபெற்ற மகிந்த சிந்தனையின் வெளிநாட்டு கொள்கை ஆகும்.

இந்த மகிந்த சிந்தனை வெளிநாட்டு கொள்கையின்படி, ஐநா மனித உரிமை மகாநாட்டில் அமைச்சர்கள் ஜி.எல். பீரிசும், மகிந்த சமரசிங்கவும் உறுதிமொழி வழங்கிவிட்டு வந்துள்ளார்கள். கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைகுழு அறிக்கை சிபாரிசுகளை அப்படியே அமுல் செய்வோம் என்று உலகத்திற்கு வாக்குறுதி அளித்தார்கள். சும்மா உறுதி மொழி அல்ல, சூடம் கொளுத்தி, சத்தியம் செய்து உறுதிமொழி வழங்கி வந்துள்ளார்கள்.

ஆனால் இன்று இங்கே உள்நாட்டில் கதை மாறி விட்டது. எல்எல்ஆர்சி சிபாரிசுகளில் எதை முழுமையாக அமுல் செய்வோம், எதை அரைகுறையாக அமுல் செய்வோம் என ஒரே குரலில் இவர்களால் சொல்ல முடியவில்லை. எதை அமுல் செய்யவே மாட்டோம் என்பதையும் ஒரே குரலில் சொல்ல இவர்களால் முடியவில்லை. இந்நிலையில் வெளிநாட்டுகாரர் நமது நாட்டை மதிப்பார்களா? உள்நாட்டிலே கையெழுத்து போட்டுவிட்டு பிறகு கிழித்து வீசுவதைபோல வெளிநாட்டுகாரனை ஏமாற்ற முடியுமா?

பர்மாவில் இராணுவ ஆட்சி நடக்கின்றது. அங்கே இராணுவ ஆட்சியாளர்களால், எதிர்கட்சியை சார்ந்த ஜனநாயக அரசியல் தலைவர் ஆங்சன் சூகி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இங்கே நடப்பது ஜனநாயக ஆட்சி என சொல்லிகொள்கிறார்கள். இராணுவ ஜெனரலாக இருந்து ஜனநாயக அரசியல் தலைவராக மாறிய சரத் பொன்சேகா இங்கே இன்னமும் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே பர்மிய இராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து, இலங்கையின் ஜனநாயக ஆட்சியாளர்கள் பாடம் படிக்க வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நாட்டில் எப்படி உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில், இலங்கை ஜனாதிபதி பர்மிய இராணுவ ஆட்சியாளர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now