தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்ததால் அது பற்றி பேசமாட்டேன்: ஹக்கீம்


தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சரும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

"முடிந்த பிறகு குப்பையை கிளறுவதும் வீர வசனம் பேசுவதும் தேவையில்லாத விடயமாகும். இதற்கு மேல் தம்புள்ள பள்ளிவாசல் பற்றி பேசினால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்" என அவர் குறிப்பிட்டார்.

சதிகாரர்களுக்கு எல்லாம் மிகைத்த சதிகாரன் ஒருவன் இருக்கும் போது நாங்கள் எதையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை. கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும். இதற்கு முன்னுதாரணமாக நடந்த பல சம்பவங்கள் அமைந்திருக்கின்றன எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் ஹக்கீம்,  கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18ஆவது அரசியல் யாப்பு திருத்தத்துக்கு ஆதரவு அளித்திருக்காவிட்டால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இன்று யுத்தம் வெடித்திருக்கும்.  இதை அரசாங்கத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே போட்டியிட முடியும் என்ற சட்டத்தை 18ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மாற்றியதன் மூலம் இதனைச் செய்திருக்கிறோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எவ்வளவு தான் வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட ஜனாதிபதி ஆட்சி ஆட்டம் காணுகின்ற ஆட்சியாக மாறியிருக்கும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்த பின்னணியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பெரும்பான்மை உள்ளது.

இந்த நிலையிலே தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எட்டு ஆசனங்களும் 18ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு வலிமை சேர்த்தது. இது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் சரணாகதி அரசியல் நடத்த தயாரில்லை. நாங்கள் அரசாங்கத்தோடு இணைந்த மறுநாளே கல்முனையில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் கண்ணைத் திறந்துகொண்டு படு குழியில் விழுந்திருக்கிறோம். என நான் தெரிவித்தேன்.

இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமைக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற காரணத்தினாலே அன்று இவ்வாறு தெரிவித்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசோடு இணைந்திருப்பது பற்றி இன்று மக்கள் மத்தியில் பலவிதமாகப் பேசப்படுகின்றது. அரசில் எமக்கிருக்கின்ற அந்தஸ்த்து தொடர்பாக இன்றும் பெரிய பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன.

அரசோடு இருக்கிகின்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ எமது அந்தஸ்தை தீர்மானிப்பவர்கள் அல்ல என்பதை இவ்விடத்தில் எத்திவைக்கின்றேன்.

தமிழ் தேசியம் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற போது தமிழ் ஊடகங்களால் நான் விமர்சிக்கப்படுகிறேன். ஒரு தேர்தல் பகிஷ்கரிப்பினால் விடுதலை புலிகள் தங்களை அழித்துக்கொண்டார்கள் என அவர்களின் மகா தவறைச் சுட்டிக்காட்டினேன். இதற்காக தமிழ் பத்திரிகையாளர்கள் என்னை விளாசித் தள்ளிவிட்டார்கள். எவ்வாறு எழுதினாலும் அதைப் பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. ஏனெனில் சிலவேளை பத்திரிகைகள் உயிர் வாழ அவை வேண்டியிருக்கின்றன" என்றார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், பைசால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், அபூ உவைதா மௌஜூத் மற்றும் எம்.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now