அரசு தொடந்தும் மக்களை சித்திரவதை செய்கிறது - அம்னஸ்டி கண்டனம்

அரசு தொடந்தும் மக்களை சித்திரவதை செய்கிறது - அம்னஸ்டி கண்டனம்இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் முறையற்ற விதத்தில் நடத்துவதாகவும், பொதுமக்கள் காணாமல் போதல்கள் நடப்பதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது ஆண்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது ஆண்டறிக்கையில் அந்த அமைப்பு விபரமாக குறிப்பிட்டுள்ளது. அதில் இலங்கை குறித்து குறிப்பிடும் போதே இந்தக் கருத்துக்களை அது கூறியுள்ளது.

மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த செயல்கள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படாமல் இருக்கும் பல நிகழ்வுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் இருப்பதாகவும் அம்னெஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் இரு தரப்பும் செய்த போர்க்குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்து வந்ததால், அது குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்துமாறு அம்னெஸ்டியும் கோரும் நிலைமை உருவானது என்றும் அது கூறியுள்ளது.

இந்தியா குறித்து கருத்து வெளியிட்டுள்ள அம்னெஸ்டி அமைப்பு, பொருளாதார வளர்ச்சியில் தனது கவனத்தை குவித்துள்ள இந்திய அரசாங்கம், பல சந்தர்ப்பங்களில் அதற்கு பதிலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மனித உரிமைகளை பாதுகாத்து, வளர்ப்பதை பலியிட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.

மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்தியாவில் 250 பேர் வரை இறந்திருப்பதாகவும், டில்லி மற்றும் மும்பாயில் தாக்குதல்களில் 50 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பத்தில் வெற்றிபெற்றதாக கூறியுள்ள அம்னெஸ்டி, ஆனால் அதற்கான சட்டங்களை கொண்டுவருவதில் நாடாளுமன்றம் தோல்வியடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now