மத்தியகிழக்கு மனித உரிமைகள் குழுக்களால் கடந்தவாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையானது
பெங்காசியிலும் ஏனைய நகரங்களிலும் கடாபிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததற்குப் பின்னர்,
உடனடியாக, எதிர்ப்பு படைகள் மேற்கத்திய ஆயுத படைகளிடமிருந்து பயிற்சி
பெற்றதாகவும், அத்தோடு நேட்டோ சக்திகளிடமிருந்தும் மற்றும் அதனோடு சேர்ந்த
அரேபிய அரசுகளிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றதாகவும் அந்த அறிக்கை
குறிப்பிடுகிறது.
எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த
பெப்ரவரியில் வெடித்த கடாபிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு, லிபியாவிற்குள்
ஓர் ஏகாதிபத்திய-சார்பு உள்நாட்டு யுத்தத்தைத் தொடங்க, அமெரிக்கா,
பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அவற்றின் முகவர்களால் வேகமாக
கைப்பற்றப்பட்டது.
அந்த அறிக்கை குறிப்பிடுவது: “இந்த
புலனாய்வு திட்டத்தின் கீழ் கையில் கிடைத்த முதல்கட்ட தகவல்களும், மற்றும்
இரண்டாங்கட்ட ஆதாரங்களின்படி, சான்றாக, கடாபி துருப்புகளால்
கைப்பற்றப்பட்டு இருந்த சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் மீதான
தாக்குதல்கள் உட்பட, எதிர்ப்பு படைகளால் எடுக்கப்பட்ட ஓர் ஒடுக்குமுறை
நடவடிக்கையாக விவரிக்கப்படக்கூடிய ஒன்றில் நேட்டோவும் பங்கெடுத்திருந்ததாக
காணப்படுகிறது.
அதேயளவிற்கு, ஒரு பிராந்திய உணவுக்கிடங்கு போன்ற
குறிப்பிட்ட இலக்குகளைத் தேர்ந்தெடுத்தமையானது, குடிமக்களைப் பாதுகாக்கும்
சாக்கில் நடத்தப்பட்ட இதுபோன்ற தாக்குதல்களின் பங்கு குறித்து முதல்
பார்வையிலேயே முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.”
43 ஆண்டுகளுக்கு முன்னால் லிபியாவின்
எண்ணெய் வளங்களை அமெரிக்காவிற்கும், பிரிட்டிஷ் கூட்டு ஸ்தாபனங்களுக்கும்
வழங்கியவரும், லிபிய மண்ணில் அந்த இரண்டு சக்திகளின் பெரும் இராணுவ தளங்களை
அமைக்க அனுமதித்தவருமான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கைப்பாவையான
இட்ரெஸ் அரசரின் கீழ் இருந்த பழைய நிலைமைகளுக்குப் பின்னால் நகர்த்துவதை
நோக்கமாக கொண்டிருந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளின் மிதமான
பிம்பமாக மட்டுமே அந்த அறிக்கை இருந்தது. சிர்ட்டேயை
தரைமட்டமாக்குவதற்கும், கடாபிக்குத் தான்தோன்றித்தனமாக தீர்ப்பு
வழங்குவதற்கும் இட்டு சென்ற பாரிய அழிப்புகள் மற்றும் படுகொலைகள், “மனித
உரிமைகளுக்கான” மற்றும் “குடிமக்களின் பாதுகாப்பிற்கான” ஒரு யுத்தம் என்ற
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அர்த்தமற்றதாக மட்டும் ஆக்கவில்லை, அதை
வெறுப்பூட்டுவதாகவும் ஆக்கியுள்ளது.
லிபியாவின் எல்லைகளில் இருக்கும் இரண்டு
நாடுகளான துனிசியா மற்றும் எகிப்தில் நீண்டகாலமாக இருந்துவந்த
மேற்கத்திய-சார்பு ஆட்சிகளை வெளியேற்றிய புரட்சிகர எழுச்சிகளுக்கு அமெரிக்க
மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் காட்டிய விடையிறுப்பாக லிபிய சூறையாடல்
இருந்தது. அந்நாடுகளின் எண்ணெய் வளங்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டை
நிறுவுவதும், வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு முழுவதிலும் எழுந்த
தொழிலாள வர்க்க போராட்டங்களின் வளர்ச்சியை ஒடுக்குவதும் மற்றும் கடாபி
ஆட்சியோடு மிக நெருக்கமாக பொருளாதார உறவுகளை ஸ்தாபித்திருந்த சீனா மற்றும்
ரஷ்யாவிற்கு ஒரு பலத்த தாக்கத்தை கொடுப்பதுமே அந்த ஏகாதிபத்திய யுத்தத்தின்
நோக்கமாக இருந்தது.
அந்த யுத்தம் அந்நாட்டை சீரழிவுக்கு
உள்ளாக்கியது. அல்கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் சிலர் உட்பட கடாபி
ஆட்சியின் முன்னாள் அதிகாரிகள், இஸ்லாமிஸ்டுகள், மற்றும் மேற்கத்திய
உளவுத்துறை உடைமைகளின் ஒரு ஸ்திரமற்ற கூட்டணியான தேசிய இடைக்கால சபையே,
அந்த யுத்தம் 50,000 நபர்களின் உயிரைப் பறித்துவிட்டதாகவும், மேலும் 50,000
பேரை காயப்படுத்தியதாகவும் மதிப்பிடுகிறது. தேசிய இடைக்கால சபைக்குள்
இருக்கும் கோஷ்டிகளுக்கு இடையில் அதிகரித்துவரும் உட்பூசல், போட்டி
மரபுரீதியான குழுக்களுக்கும், பிராந்தியரீதியான போராளிகளுக்கும் இடையில்
முழு அளவிலான உள்நாட்டு யுத்தத்திற்குக் கதவுகளைத் திறந்துவிடுகின்றது.
இந்த வாரயிறுதியில்தான், அதிகரித்துவரும்
உள்நாட்டு யுத்தம் குறித்து தேசிய இடைக்கால சபை தலைவர் முஸ்தபா அப்தெல்
ஜலீலிடமிருந்து வெளியான எச்சரிக்கைகளுக்கு இடையில், இடைக்கால அரசாங்கத்தை
இராஜினாமா செய்யக்கோரி ஒரு கூட்டம் பெங்காசியில் தேசிய இடைக்கால சபையின்
தலைமையிடத்திற்குள் வலுக்கட்டயமாக நுழைந்தது. தேசிய இடைக்கால சபையின் துணை
ஜனாதிபதி அப்தெல் ஹாபிஜ் ஹோகா அந்த சரியான நேரத்தில் இராஜினாமா செய்தார்.
அமெரிக்க-நேட்டோ யுத்த குற்றங்களின்
அறிக்கையானது, வாஷிங்டன் மற்றும் நேட்டோவின் மனித உரிமை போலிக்காரணங்களையே
கிளிப்பிள்ளை போல மீண்டும்மீண்டும் கூறிக்கொண்டு, அவ்விதத்தில் லிபிய
யுத்தத்திற்கு பகிரங்கமாகவோ அல்லது பின்னாலிருந்தோ ஆதரவு கரம் நீட்டிவந்த,
“இடது” கட்சிகளின் வகையறாக்கள், அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின்
மீதான இன்னுமொரு குற்றப்பத்திரிக்கையாகவும் உள்ளது. சமூக ஜனநாயகவாதிகள்,
பசுமை கட்சியினர், ஜேர்மன் இடது கட்சி போன்ற முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளில்
இருந்து பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும்
அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) போன்ற போலி-தீவிர
கொள்கையுடையவர்கள் வரையில் இத்தகைய சக்திகளும் ஏகாதிபத்திய முகாமிற்குள்
நகர்ந்துள்ளன என்பதையே அது அடிக்கோடிடுகிறது.
