அமெரிக்காவில் எளிதில் குடியுரிமை பெற விதிமுறையில் திருத்தம். ஒபாமா



அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் எளிதில் குடியுரிமை பெறும் வகையில் குடியுரிமை விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை பொருளாதார சீர்திருத்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அந்த அறிக்கை முழுக்க முழுக்க வாக்காளர்களின் ஆதரவை பெறும் நோக்கில் அமைந்திருந்தது.

ஒபாமா பேசியது: எத்தனையோ நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் சிறுவயதிலேயே இங்கு வந்துள்ளனர். அமெரிக்காவின் முன்னேற்றத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், மாணவர்களின் பங்கு அளப்பரியது.

ஆனால் இங்கு அவர்கள் தாங்கள் எந்த நேரத்திலும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த அச்சத்தை போக்கி அவர்களையும் அமெரிக்கக் குடிமக்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை எனது தலைமையிலான அரசு நிச்சயம் செய்யும். குடியுரிமையை அவர்கள் எளிதாக பெறும் வகையில் விதிமுறை தளர்த்தப்படும்.

அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி குடியுரிமை விதிமுறை எளிதாக்கப்படும் பட்சத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த அறிவுஜீவிகளும், தொழில் அதிபர்களும் நிச்சயம் உற்சாகம் அடைவர். அவர்கள் அமெரிக்காவுக்கு வந்து பணியாற்றவும், முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டுவர் என்று நம்புகிறேன்.

"அயல்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடையாது': வெளிநாடுகளில் பணிகளை ஒப்படைக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை உள்ளிட்ட சலுகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெருக்குவதில் எனது தலைமையிலான அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூடுமானவரை உள்நாட்டிலேயே பணியை செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செயல்படும் நிறுவனங்களுக்கு அரசும் பக்க பலமாக இருக்கும். இதில் சந்தேகம் வேண்டாம். இரட்டிப்பு வரிக் குறைப்பு சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அளிக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

கடுமையான நிதி நெருக்கடி: நாடு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எனினும் இதனால் சோர்ந்திடவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து கட்டாயம் மீள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு நல்ல பலனும் கிட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தனியார் நிறுவனங்களும் அரசுடன் கை கோத்துப் பணியாற்ற வேண்டும். குறிப்பாக உற்பத்தி நிறுவனங்கள் இயன்றவரை உள்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

உலக விவகாரங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தொடர்பு எப்போதுமே பிரிக்க முடியாதது. உலக அரங்கில் அமெரிக்கா வல்லமை பெற்ற சக்தியாக விளங்குகிறது. இது வரும் காலங்களிலும் தொடரும் என்றார் அதிபர் ஒபாமா.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now