விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் இத்தகைய அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்தே சிறிலங்கா அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் பிரகடனத்துக்கமைய, உறுப்பு நாடு ஒன்றின் அஞ்சல் தலையுடன் அனுப்பப்படும் அஞ்சலை குறித்த முகவரிக்கு சேர்க்க வேண்டியது அந்த நாட்டினது கடமையாகும்.
ஆனால், விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் கூடிய எந்தவொரு அஞ்சல் தலையுடனும் வரும் அஞ்சல் அல்லது பொதிகளை சிறிலங்காவில் உரிய முகவரிக்கு விநியோகிக்க முடியாது என்று, பிரான்சின் அஞ்சல்துறையான லா-போஸ்ட் அதிகாரிகளுக்கு முறைப்படி அறிவித்துள்ளதாக சிறிலங்கா அஞ்சல் மா அதிபர் கே.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்த விடயத்தில் நாம் உள்நாட்டு சட்டங்கள் ஒழுங்கு விதிகளுக்கமைவாகவே நடந்து கொள்வோம். ஏனையவற்றை விட சிறிலங்காவின் நலனே எமக்கு முக்கியம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் தடை உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரான்சில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல் தலைகள் வெளியாகியுள்ளதற்கு சிறிலங்கா அரசாங்கம் முறைப்படி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

