தற்போது "தைபஸ்" காய்ச்சல்
வேகமாகப் பரவிவருகிறது. யாழ். மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 57 பேர்
இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், தலையிடி, உடல்
அலுப்பு, சில வேளைகளில் குமட்டல், வாந்தி, உடலில் கறுப்பு நிற அடையாளங்கள்
ஏற்படுதல் போன்றவை இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தொற்று நோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய அறிகுறிகள் ஏற்படாமலும் கூட இந்தக் காய்ச்சல் இருக்கலாம் எனவே உரிய சுகாதார வசதிகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களை அறிவுறுத்துகிறது சுகாதாரப் பகுதி. இது குறித்து மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவது: ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பக்றீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய் இந்த தைபஸ் காய்ச்சல். இந்த வகை பக்றீரியாக்கள் கடத்தப்படுவது புறவொட்டுண்ணிகள் மூலமே. இவைபெரும்பாலும் தெள்ளு, பேன், உண்ணிகள், பாலுண்ணிகள் என்பன இரத்தத்தை உறிஞ்சும் போது தொற்றுகின்றது. தவிர தோலின் மேற்பரப்பில் அவை காணப்படும் போது அவற்றின் மலம் தோலில் விடப்படுவதனால் அந்த மலம் தோலில் காணப்படும் புண்களினூடாக உட்சென்றும் நோயை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகளினாலும், பாலுண்ணிகளினாலும், புற உண்ணிகளினாலுமே கடத்தப்படுகின்றன. பறக்கும் அணில்களில் காணப்படும் புற ஒட்டுண்ணிகளான மனித உடற்பேன்களும் ஒருவகை பக்டீரியாவைப் பரப்புகின்றன. சமூக மட்டத்திலும், சனத்தொகை அதிகமான பிரதேசங்களிலும் உடற்பேன்கள் அதிகம் காணப்படுகின்றன. தவிர போர், வறுமை, இயற்கைப் பேரிடர் நிகழும் இடங்களில் இந்த நோய் பரவும் வேகம் அகிகமாகும். விசேடமாகக் குளிரான மாதங்களில் உடைகளைச் சரியான முறையில் சலவை செய்து பாவிக்காத பிரதேசங்களிலும் இந்த வகை ஒட்டுண்ணிகள் அதிகமாகத் தொற்ற வாய்ப்புண்டு. எனவே ஒவ்வொருவரும் நன்கு சவர்க்காரமிட்டு தினமும் குளித்தல் வேண்டும். நன்கு துவைக்கப்பட்ட ஆடைகளை அணிதல் வேண்டும். கால்நடைகளுடன் பழகுபவர்கள், பற்றையுள்ள இடங்களுக்குச் சென்றவர்கள் உடன்நன்கு சவர்க்காரமிட்டு குளித்தல் வேண்டும். பற்றையுள்ள இடங்களுக்கும் தேவையற்ற வகையில் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் என பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. |
தைபஸ் காய்ச்சல் பரவுகிறது மக்களுக்கு அபாய அறிவிப்பு அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள்
Labels:
அறிவிப்புகள்,
இலங்கை