இலங்கை
அணியின் பயிற்றுநராகவிருந்த ஜொவ் மார்ஷை அகௌரவமான முறையில் இலங்கை
நீக்கியதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க
விமர்சித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெவ் மார்ஷ் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை
அணியின் பயிற்றுநராக இரு வருட கால ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டார்.
சுமார் 4 மாதங்களின்பின் இவ்வாரம் மார்ஷ் நீக்கப்பட்டு, தென்னாபிரிக்க
அணியின் முன்னாள் பயிற்றுநர் கிரஹம் போர்ட் இலங்கை அணியின் புதிய
பயிற்றுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அர்ஜுன ரணதுங்க கூறுகையில், "மார்ஷ் போன்ற
தொழில்வாண்மையாளர்களை நீக்குவதில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்பட்டவிதமாக
அவமானகரமானதாகும். மார்ஷை நீக்கியமை இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியுடன்
இணைந்து செயற்படும் அல்லது செயற்பட திட்டமிட்டுள்ள தொழிற்சார்
உத்தியோகஸ்தர்களுக்கும் தவறான சமிக்ஞையை அளிக்கிறது.
எதிர்காலத்தில் முன்னிலை பயிற்றுநர்கள், உடற்கூற்று மருத்துவர்கள்
இலங்கையிடமிருந்து பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன் இரு தடவை
சிந்திப்பார்கள். ஸ்ரீலங்கா கிரிக்கெட் மிகத் தவறான முன்னுதாரணத்தை
ஏற்படுத்திவிட்டது" என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள அர்ஜுன ரணதுங்க 1996 ஆம் ஆண்டு
உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவர் ஆவார் என்பது
குறிப்பிடத்தக்கது.
'நாட்டில் கிரிக்கெட்டை நிர்வகிப்பவர்களுக்கு இவ்விளையாட்டு குறித்த
அறிவுஇல்லை. அவர்கள் இவ்விளையாட்டை நேசிக்கிறார்கள் என எண்ணுகிறீர்களா?
இல்லை. ஸ்ரீலங்கா கிரிக்கெட் பெரும் குழப்பத்தில் உள்ளது.' என அர்ஜுன
கூறினார்.
அதேவேளை மஹேல ஜயவர்தனவை மீண்டும் அணித் தலைவராக நியமித்தமை இலங்கை அணியின்
தோல்விகளை முடிவுக்கு கொண்டுவருதற்கான சரியான வழியல்ல எனவும் அர்ஜுன
கூறியுள்ளார்.
'இது தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைப் போலுள்ளது. மஹேல மேலும் இளமையாகப்
போவதில்லை. அவர் இப்பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்டமை ஆச்சரியமளிக்கிறது.
இளையவர்களை தலைமைத்துவத்திற்காக நாம் வளர்க்க வேண்டும்' என அவர் கூறினார்.
கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடே நிதிப்பற்றாக்குறைக்கு வழிவகுத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.