ஹாலிவூட் ஸ்டைலில் மற்றொரு விஞ்ஞானியை கொன்றது சி.ஐ.ஏ.!

ஈரானிய அணு விஞ்ஞானிகள் மர்மமான முறையில் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவது தொடர்கிறது. நேற்று (புதன்கிழமை) ஈரானிய அணு ஆய்வுகூடம் ஒன்றில் பணிபுரிந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கொல்லப்பட்டதாக, அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஈரானின் அணுத் திட்டங்களை முடக்கவே, அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் குறி வைக்கப்படுகின்றனர் என ஈரானிய அரசு கூறிவருகிறது.

 நேற்று கொல்லப்பட்ட பேராசிரியரின் மரணத்தின் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-வும், இஸ்ரேலும் உள்ளன என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் விஞ்ஞானியைக் கொலை செய்த முறையும், இவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட கொலையாளிகள் என்பதையே காட்டுகிறது.

பல்கலைக்கழகத்துக்கு வெளியே பேராசிரிரியர் கொல்லப்பட்ட இடம்

கொல்லப்பட்ட விஞ்ஞானி தனது காரில் இருந்திருக்கிறார். அப்போது இந்த மோட்டார் சைக்கிள் காரைக் கடந்து செனிறிருக்கிறது. காரைக் கடக்கையில், மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்த நபர் தனது கையில் இருந்த ஒரு பொருளை காரின் பின்புறத்தில் வைக்க அது ஒட்டிக் கொண்டுவிட்டது.
அந்தப் பொருள், ஒரு காந்த வெடிகுண்டு!

காரில் இருந்த இரும்புப் பகுதியில் காந்தம் கெட்டியாக ஒட்டிக்கொள்ள, சில விநாடிகளில் கார் வெடித்துச் சிதறி, அதிலிருந்த பேராசிரியர் மொஸ்தாபா அஹ்மாடி ரொஷானைக் கொன்றுவிட்டது. (காரில் இருந்த மற்றொருவரும் கொல்லப்பட்டார்)

இதுபோன்ற ஹாலிவூட் சினிமா ஸ்டைலில் துல்லியமான முறையில் கொல்வது சாதாரண ஆட்களால் இயலாத காரியம் என்று கூறியுள்ள ஈரானிய அரசு, இது சி.ஐ.ஏ. அல்லது இஸ்ரேலின் வேலைதான் என்று அடித்துச் சொல்கிறது. கொல்லப்பட்ட விஞ்ஞானி பல்கலைக்கழக பேராசிரியர் என்ற போதிலும், இவர் முழுநேரமாக பணிபுரிந்தது, நட்டான்ஸ் அணு ஆலையின் யூரேனியம் பிரித்தெடுக்கும் டிப்பார்ட்மென்டில்தான்.

நட்டான்ஸ் அணு ஆலையே ஈரானின் மிகப்பெரிய அணு ஆலை. ஈரான் இங்கு வைத்துத்தான் அணு ஆயுத முயற்சிகளில் ஈடுபடுவதாக மேற்கு நாடுகள் குற்றம் சுமத்துகின்றன. (ஈரான் அதை மறுத்தும் வருகின்றது)

தமது அணு ஆலைகளை அழிக்கும் முயற்சியில் மேற்கு நாடுகளின் உளவுத்துறைகள் ஈடுபட்டுள்ளதாக கூறும் ஈரான், அமெரிக்கா (சி.ஐ.ஏ.) பிரிட்டன் (எம்.ஐ.6) இஸ்ரேல் (மொசாத்) ஆகிய நாடுகளின் உளவுத்துறைகள் அணு ஆலைகளில் பணி புரியும் முக்கிய நபர்களை வரிசையாகக் கொல்வதன்மூலம், அணு ஆலைகளை செயற்பட விடாது தடுக்க முயற்சிக்கின்றன என்கிறது.

2010ம் ஆண்டிலிருந்து இன்றுவரை மூன்று அணு விஞ்ஞானிகள் ஈரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now