
பிரான்ஸின் லா போஸ்ட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் படங்கள் பதித்த அஞ்சல் முத்திரைகள் பயன்படுத்தப்படுவதை தடைசெய்யுமாறு கோரி, சர்வதேச அஞ்சல் சங்கத்திடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை முத்திரை சங்கத்தின் பொருளாளர் தமமிந்த கொடஹேவா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசாங்கம், இதுவரை உத்தியோபூர்வமாக புலிகளின் இந்த முத்திரைகளை தடைசெய்யவில்லை. பிரான்ஸ் தூதுவர் இலங்கை அரசாங்கத்திடம் தனது கவலையை மாத்திரமே வெளியிட்டுள்ளார்.
புலிகளின் இந்த முத்திரைகளை தடைசெய்யாது போனால், சர்வதேச முத்திரை சந்தையில், முத்திரைகளின் விலைகளை தீர்மானிக்கும் ஸ்டென்லி கீபனில் புலிகளின் முத்திரைகள் உள்வாங்கபட வாய்ப்புள்ளது.
இதனால் புலிகளின் இந்த முத்திரைகள் தடைசெய்யப்பட வேண்டும். பயங்கரவாத அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் முத்திரைகளை வெளியிட எந்த நாட்டுக்கோ, நிறுவனத்திற்கோ தார்மீக உரிமைகள் கிடையாது. இதனால் சர்வதேச அஞ்சல் சங்கத்தில் முறையிட தாம் தீர்மானித்துள்ளதாகவும் கொடஹேவா தெரிவித்துள்ளார்.