பல இடங்கள் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை வலுப்படுத்தியிருக்க, குவாந்தனாமோ புலனாய்வுத் தகவல் திரட்டுவதில் உதவியுள்ளதா ?
கியூபாவில் உள்ள குவாந்தனாமோ சிறைக்கு முதலாவது கைதி கொண்டு வரப்பட்டு ஆண்டுகள் பத்து கழிந்து விட்டன.
இச்ச்சிறையை மூடிவிடும்படி எழும் தொடர்ச்சியான கோரிக்கைகளையும் தாண்டி எதிர்பார்க்கப்படும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையிலும் இது ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கும் சாத்தியமே தெரிகின்றது.
9/11 தாக்குதல்களை அடுத்து அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் அமெரிக்கா பயங்கரவாதிகள் என்று குற்றம் சுமத்துவோரை தடுத்து வைத்து விசாரிக்க இந்த இடத்தை தேர்வு செய்திருந்தார்.
லண்டன் மற்றும் வாஷிங்க்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு நினைவு தனத்தை குவாந்தனாமோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 171 கைதிகள் எதிர்ப்பு சுலோகங்களைத் தாங்கி உட்கார்ந்தும், உண்ணாவிரதம் அனுஷ்டித்தும் எதிர்கொள்ள உள்ளனர்.
பெரும்பானமையான கைதிகள் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி கால வரையறை இன்றி தடுத்து வைத்திருக்கப்படுவதே இச்சிறை தொடர்பான முக்கிய சர்ச்சையாக அமைகிறது.
இதுவரை இங்கிருந்த 779 கைதிகளுள் ஆறு பேர் மாத்திரமே இதுவரை விசாரணைக்குப் பின்னர் தண்டனை பெற்றுள்ளதுடன் அதிகமானோர் பல ஆண்டுகள் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பல கைதிகள் மீதான மனிதாபினம் அற்ற சித்திரவத தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
எனினும் அமெரிக்க அல் கயீதாவுடன் தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரும்பான்மை அமெரிக்கர்கள் போர்க்களங்களில் பிடிபடுவோரை தடுத்து வைக்க இவ்வாறான சிறை ஒன்று அவசியம் என்ற கருத்தையே கொண்டிருந்தனர். தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா குவாந்தனமோவை மூடிவிடுவதற்காக குறித்த தினம் கூட இரண்டு வருடங்களுக்கு முன்னர் கழிந்து விட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க சட்டம் கால வரையறையற்ற தடுத்து வைத்தலை அங்கீகரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த விடயங்கள் குவாந்தனாமோ புலனாய்வுத் தகவல்கள் திரட்டுவதில் வெற்றியளித்துள்ளதா? அத்துடன் அது தொடர்ந்து இயக்கப்படுமா? ஆகிய கேள்விகளையே தோற்றுவிக்கின்றன.
குவாந்தனாமோ பற்றிய சில தகவல்களும் கருத்துகளும் வருமாறு:
“சித்திரவதைப்படுத்தி நாம் பெற்ற எந்தத் தகவலையும் பாவிப்பதில்லை என்பதே இரண்டு வருடங்கள் எனது கொள்கையாக இருந்தது. ஆனால், எனது மேலதிகாரிகள் இடமாற்றம் பெற்றும் இளைப்பாறியும் சென்ற பின்னர் வந்த புதியவர்கள் ‘எமது ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நாம கைதிகளை சித்திரவதை செய்யவில்லை என்று கூறும்போது அதற்கு எதிராக கருத்துச் சொல்ல நீ யார்?’ என்று கேட்டதுடன், இங்கு நாம் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பிரயோசனமானவை என்றும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் முடிவேடுத்தனர் – இதனை அடுத்துத் தான் நானா ராஜினாமாச் செய்தேன்” – மொறிஸ் டேவிஸ், முன்னாள் குவாந்தனாமோவுக்கான தலைமை வழக்கறிஞர்.
குவாந்தனாமோ கைதிகள் நடத்தப்படும் முறை தொடர்பில் 2002ம் ஆண்டு புஷ் நிர்வாகம் அளித்த பதில்:
“குவாந்தனாமோவில் கைதிகள் நடத்தப்படும் முறை பொருத்தமானதும், சரியானதும், மனிதாபினமானதும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது சர்வதேச ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரனைகளுக்கு முற்றிலும் அமைவானது. எந்தவொரு கைதிக்கும் தீங்கிழைக்கப்படவோ அவர்கள் முறைகேடாக நடத்தப்படவோ இல்லை” – டொனால்ட் ரம்ச்பீல்ட், முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர்.
“ஜெனீவா பிரேரணைக்கு முரணாக நாங்கள் அவர்களை நடத்துவதாக குற்றச்சாட்டு இருக்கலாம், ஆதாரம் ஏதும் இல்லை. இவ்வாறு குற்றம் சாட்டுவோர் அவர்கள் பேசுவதைப் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை – ஜோர்ஜ் புஷ், முன்னாள் அமெரிக்க அதிபர்.
“குவாந்தனாமோ தனியானதும் வேறுபட்டதுமான நீதியான முறைகள் அற்று கால வரையறயின்றி கைதிகளைத் தடுத்து வைக்கும் இடமாகும். 2002 இலிருந்து இன்றுவரை அது உண்மையாக மாற்றமின்றி நிலைத்திருக்கின்றது. ஆரம்பகால 800 கைதிகளில் பெரும்பாலானோர் எந்தவொரு போர்க்களத்துக்கு அருகிலும் கைது செய்யப்படவில்லை, மாறாக பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சன்மானமாக விற்கப்பட்டவர்கள்” – றம்சி காசெம், தற்போது குவாந்தனாமோவில் உள்ள பல கைதிகளைப் பிரதிநிதிதிதத்துவப்படுத்தும் சட்டத்தரணி
“குவாந்தனமோவில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்களவு வித்தியாசம் காணப்படுகின்றது அத்துடன் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை எவ்வாறு செய்தது என்பதிலும் விவாதங்கள் நிலவுகின்றன. தடுத்துவைப்பு முகாம்களைப் பற்றிப் பேசுவதும் அங்கு இடம்பெறும் விடயங்களைப் பற்றி கலந்துரையாடுவதும், CIA என்ன செய்தது, மற்றும் பல்வேறு வகைப்பட்ட கொள்கைகளை கலந்டுரையாடுவதும் சாதரணமான விடயங்களாகும். குவாந்தனாமோ பெண்டகனால் நடாத்தப்படும் ஒரு தடுத்துவைப்பு முகாமாகும். அது சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல” – ஜேம்ஸ் கரபானோ, Heritage Foundation.
குவாந்தனாமோ பற்றிய சில தகவலகள்:
- ஜனவரி 11, 2002 முதல் மொத்தமாக 779 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
- பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அறுநூறுக்கும் அதிகமானோர் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்
- ராணுவ ஆணைக்குழுவால் ஆறு கைதிகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர்
- அமெரிக்க சிவில் நீதிமன்றத்தில் ஒரே ஒரு கைதியே விசாரிக்கப்பட்டுள்ளார்
- தற்போது 171 கைதிகள் குவாந்தனாமோவில் எஞ்சியிருக்கின்றனர்