இந்த மாதம் 14 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.
கொழும்பு நகரில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயாளர்களின் புள்ளிவிபர அடிப்படையில் 50 வீதமான நோயளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் பொரளைப் பகுதியை அண்டிய 6 பிரதேசங்களில் உள்ள அரச தனியார் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்காக 150 குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர், பொலிஸார் சுற்றாடல் பிரிவு அதிகாரிகள், சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள் ஒன்றினைந்து இந்த வேலைததிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு கொழும்பு மாநகர சபையின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் பிரதேசத்தில் நீர் வடிகான்கள் மற்றும் பிரதேசத்தில் உள்ள நீர்நிலைப்பிரதேசங்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.