
ஒசாமா
பின்லாடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா முயற்சிக்கிறது, ஆனால், நான்
குகைகளில் ஓடி ஒளிய மாட்டேன், என ஜமாத் உத் தாவா தலைவர் ஹபீஸ் முகமது
சயீது தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நடந்த பயங்கரவாத
தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூளையாக
செயல்பட்டவர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத்
தாவாவின் தலைவர் ஹபீஸ் முகமது சயீது.
இவரை
பிடித்து கொடுப்போருக்கு அல்லது இவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு ஒரு கோடி
டாலர் வெகுமதி அளிக்கப்படும், என அமெரிக்கா அறிவித்துள்ளது.இது குறித்து
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில், சயீது, நிருபர்கள்
கூட்டத்தில் பேசுகையில்,
"ஒசாமா
பின்லாடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான்
மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை
அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டாலர்
கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு
செலவிடட்டும்.
இந்தியாவின் கருத்தை ஏற்று, "டிவி'க்களில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு
அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது' என்றார்.