பயங்கரவாதத்தை
எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை எனவும்
அதனால், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும்
ஏற்படுத்துவதற்கான மக்களின் ஆசிர்வாதத்தை இலங்கை கொண்டுள்ளது எனவும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
30 வருடகால யுத்தத்தில் இலங்கை படைகள் பாரியளவிலான படுகொலைகளையோ,
சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையோ கொலைக்களங்களையோ மேற்கொள்ளவில்லை.
இந்நாட்டில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்பட்டது என அவர் கூறினார்.
'ராவய' பத்திரிகையின் வெள்ளிவிழா, பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
"1971, 1989-90 களின் கிளர்ச்சிக் காலம் மற்றும் 30 வருடகால பயங்கரவாதம்
ஆகியன இந்நாட்டில் இரத்தத்தையும் கண்ணீரையும் தவிர வேறெதையும்
ஏற்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என நாம் திருப்தியடைய
முடியாது. ஆனால், பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் மீண்டும் தலைதூக்காத
வகையிலான சூழ்நிலையொன்றை நாம் ஏற்படுத்த உறுதிபூண வேண்டும்" என ஜனாதிபதி
வலியுறுத்தினார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டீ.எஸ். சேனநாயக்க தனது முதலாவது
சுதந்திர தின உரையில் மக்கள் தமது மத, சாதி, இன வேறுபாடுகளை மறந்து
ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைககள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு
எதிராக தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கு ஒரு பகுதியினர் முயற்சிக்கின்ற
நிலையில் கடந்த திங்கட்கிழமை மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவை
வெளிப்படுத்துவதற்காக வீதியில் இறங்கினார்கள்.
அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் சுமார்
10,000 பேருக்கு புனர்வாழ்வளித்தது. 250,000 இடம்பெயர்ந்த மக்களை
மீளக்குடியமர்த்தி வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை
ஆரம்பித்தது. 1971 ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு
புனர்வாழ்வளிப்பதற்கு மிக நீண்டகாலம் சென்றது. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி
தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழு 18 ஆண்டுகளுக்குப்பின் 1989 ஆம்
ஆண்டில்தான் அதை நிறைவுசெய்தது" எனவும் ஜனாதிபதி கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், இலங்கையின்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பத்றகு உள்நாட்டு அடிப்படையிலான தீர்வு தேவை
எனக் கூறினார்.
"ராவயவானது 1977 ஆம் ஆண்டு ஐ.தே.க.வின் தேர்தல் வெற்றியின்பின்னர் ஏற்பட்ட
சமூக மாற்றத்தின் ஒரு விளைவாகும். ராவயவானது மாற்றுக்கருத்து, மாற்று
சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் சக்திவாய்ந்த ஐ.தே.க. அரசாங்கத்தை
விமர்சித்தது.
1977 ஆம் ஆண்டு காலத்தில் நிலவியதைப்போன்ற அரசியல், சமூக, கலாசார சூழல்
மீண்டும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல், சமூக, கலாசார
மாற்றத்தை ஏற்படுத்துவத்றகு அத்தகைய சக்திகள் மீண்டும் உருவாகுவது
தவிர்க்கப்பட முடியாது" என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.