இலங்கை
கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய நேரத்திற்கு ஊதியம் வழங்கப்படாத போதிலும்
இவ்விளையாட்டின் மீதுள்ள காதல் காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள
கொமன்வெல்த் பாங்க் கிண்ணத்திற்கான முக்கோண ஒருநாள் கிரிக்கெட்
சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ளனர்.
உலகக் கிண்ணம் மற்றும் இங்கிலநர்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான்,
தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் விளையாடியமைக்காக இலங்கை
வீரர்களுக்கு 23 லட்சம் டொலர்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.
இப்பின்னணியிலேயே அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய, இந்திய
அணிகளுடனான சுற்றுப்போட்டியிலும் இலங்கை வீரர்கள் விளையாடவுள்ளனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிதி நெருக்கடியினால், இலங்கை அரசாங்கத்தின்
நிதி உதவியில்லாவிட்டால் கிரிக்கெட் வீரர்களின் சம்பளப் பிரச்சினை
தீர்க்கப்படாமல் போகலாம் என சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அச்சம்
கொண்டுள்ளதாக சிட்னி மோர்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் இலங்கை வீரர்களுக்கான கொடுப்பனவில் ஒருபகுதியை
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்புக்கூடாக இல்லாமல் வீரர்களின் வங்கிக் கணக்கில்
நேரடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் வைப்பிலிட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரர்கள் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஊதியமாக 5000 டொலர்களை
பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தின் பொதுச்செயலாளர் கென் டி
அல்விஸ் கூறியுள்ளார். இதன்படி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள
சுற்றுப்போட்டிக்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வீரர்களுக்கு
குறைந்தபட்சம் 480,000 டொலர்களை ஊதியமாக வழங்க வேண்டும்.