சிறிலங்காவின்
கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
குறித்துப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மற்றுமொரு
பெறுமதிமிக்க வாய்ப்பு நழுவிப் போவதை தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம்
அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற ஆயர்களின் மாநாட்டில்
வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தற்போதைய தருணத்தில்
அமைதியும் நல்லிணக்கமும், மிகவும் முக்கியமானதும் அவசரமானதுமான தேவையாக
இருக்கின்றது.
இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் சாத்தியமிக்க பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும்
நோக்கில் குறைந்தபட்சம் குறியீட்டு அளவிலான நடவடிக்கைகளையாவது சிறிலங்கா
அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மக்கள் புரிந்து கொள்ளும் நோக்கில் அவை
இரு அதிகாரபூர்வ மொழிகளிலும் எல்லோருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்.
சிங்களம் மட்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி, மொழி விவகாரங்களை மிகவும் முக்கியமாக கருதி அரசாங்கம் கையாள வேண்டும்.
சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், ”மிகவும்
வேதனையான – காணாமல் போனவர்களின் விவகாரத்தை” அரசாங்கம் கையாள வேண்டும்.
இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை முழுமையாக
வெளியிடுவதன் மூலம், மக்கள் தமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா,
இல்லாவிட்டால், அவர்கள் எப்போது உயிரிழந்தார்கள் என்பதையாவது அறிந்து
கொள்ள முடியும்.
தடுத்து வைக்கப்படாமல் காணாமல் போயிருப்பவர்கள் விடயத்தில், அவர்களுக்கு
என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதிலும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு பொறுப்பு
இருக்கிறது.
மக்களின் சட்டரீதியிலான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
உறவினர்களை இழந்தவர்களின் துயரங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தானவை, ஆழமாகப் பதிந்திருக்கக் கூடியவை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
நடைமுறைப்படுத்தப்படுத்தக் கூடிய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை
கண்காணிப்பதற்கு ஒரு பொறுப்பான குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமிக்க
வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
