உலகச் சந்தையில் எரிபொருள் விலை கடந்த
மூன்று மாதங்களுக்குள் வெகுவாக அதிகரித்துள்ளது. 2011 டிசம்பர் மாதம்
108.93 டொலராகவிருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 2012 ஜனவரியில்
111.34 டொலர் ஆக உயர்ந்ததுடன் இம்மாதம் அது 117.20 ஆக உயர்வடைந்துள்ளது.
ஜப்பானில் இடம்பெற்ற அழிவுகளால் அந்த
நாட்டின் எரிபொருள் உபயோகம் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. முழுமையான
கணிப்பீட்டுக்கமைய ஐரோப்பாவை அண்டிய குளிர் வலயங்களில் கடந்த காலாண்டில்
எரிபொருள் உபயோகத்தின் அளவு எதிர்பார்த்ததை விட வெகுவாக அதிகரித்துக்
காணப்படுகிறது. இதனால் 2012ல் எதிர்பார்க்கப்பட்டதை விட வெகுவாக எரிபொருள்
விலை அதிகரிப்பதற்கு இது காரணமாகியது.
இலங்கையில் எரிபொருளின் விலையை ஒப்பிடும்
போது ஏனைய ஆசிய நாடுகளில் அதிக விலையேற்றம் காணப்படுகிறது. இலங்கையில்
பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 137 ரூபாவாக உள்ள போது இந்தியாவில் சென்னையில்
இலங்கை ரூபாவின் படி 164.74 ரூபாவாகவும் மும்பாயில் 161.77 ரூபாவாகவும்
உள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரில் ஒரு லீற்றர்
பெற்றோலின் விலை 204.65 ரூபாவாகவும் தாய்லாந்தில் 140.08 ரூபாவாகவும்
உள்ளது. டீசல் விலையைப் பொறுத்தவரை இலங்கையில் ஒரு லீற்றரின் விலை 84
ரூபாவாக உள்ள போது இந்தியாவில், சென்னையில் அது 100.48 ரூபாவாகவும்
புதுடில்லியில் 95.75 ரூபாவாகவும் மும்பாயில் 102.29 ரூபாவாகவும்
விலையதிகரித்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானில் ஒரு லீற்றர்
டீசலின் விலை 124.51 ஆகவும் சிங்கப்பூரில் 149.59 ஆகவும் தாய்லாந்தில் அது
115.2 ரூபாவாகவும் உள்ளது. இலங்கையைப் பொறுத்தளவில் கடந்த வருடங்களில்
எரிபொருள் தேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.