கடந்த ஜனவரி
மாதத்தில் மாத்திரம் காணாமல் போனவர்கள் தொடர்பான 553 முறைப்பாடுகள்
கிடைத்திருப்பதாகவும், வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவே அதிகளவு
முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம்
தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் போதும் அதன் பின்னரும்
காணாமற் போனவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறு
காணாமற் போனோர் தொடர்பான விபரங்களை பதிவு செய்யுமாறு விடுக்கப்பட்ட
வேண்டுகோளை தொடர்ந்து கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 31 வரையிலான
காலப்பகுதிக்குள் யாழ். குடாநாட்டை சேர்ந்த 553 பேர் காணாமற்போனமை குறித்து
உறவினர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இவர்கள்
தங்களது குடும்பத்தவர்கள் காணாமற் போனமை குறித்த விபரங்களை
குறிப்பிட்டுள்ளதுடன் இதற்கு ஆதரமாக சத்தியக் கடதாசிகளையும்
சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில்
அதிகமானவர்கள் தாங்கள் நேரடியாக இராணுவத்திடம் ஒப்படைத்ததாகவும் அதன்
பின்பு, குடும்பத்தவர்களை ஒரு போதும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இது தவிர
இந்த முறைப்பாடுகளில் அனேகமானவை இராணுவத்தால் நேரடியாக கைது செய்யப்பட்டமை
மற்றும் வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாகவே உள்ளது.
யாழ்ப்பாணத்தில்
அரசடி சந்தி, வட்டுக்கோட்டை, மாவடி, உடுவில், கொம்மாந்துறை, சாவகச்சேரி,
ஈச்சமோட்டை, தெல்லிப்பழை உட்பட பல இடங்களில் வைத்து இவர்கள் காணாமற்
போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்
அப்பாத்துரை விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார்.