
பலரும்
எதிர்பார்த்தைப் போல பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களைப்
பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities
and Exchange Commission) சமர்ப்பித்தது. இதன் மூலம் வெளியுலகுக்கு பல
சுவாரஸ்யமான தகவல்கள் சிறிது சிறிதாகக் கசிந்த வண்ணம் உள்ளது.
இதேவேளை பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர்பேர்கின் பெறுமதி என்னவாக
இருக்கலாம் அதாவது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கலாம் என
விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் எவ்வளவு பிரபலம் பெற்று விளங்குகின்றதோ அதே
அளவிற்கு அதன் ஸ்தாபகர் ஷூக்கர்பேர்க்கும் புகழ்பெற்றுத்திகழ்கின்றார்.
பலரின் கணிப்பின் படி ஷூக்கர்பேர்கின் பெறுமதி சுமார் 28 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
அதாவது ஆரம்பப் பொது வழங்கலுடன் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு 100
பில்லியன் டொலர்களாகக் கணிக்கப்படுமாயின் அதில் 28% பங்கு ஷூக்கர்
பேர்க்கின் உடையது .எனவே அவரின் பெறுமதியானது 28 பில்லியன் அமெரிக்க
டொலர்களாகும்.
இப் பெறுமதியின் படி போர்ப்ஸ் சஞ்சிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவருக்கு கிடைக்கும் இடம் 9 ஆகும்.
என்ன? கேட்கும் போதே தலை சுற்றுகின்றதா? எங்களை வைத்தே அதாவது எமது
தரவுகளை வைத்தே ஷூக்கர் பேர்க் கோடிஸ்வரராகி விட்டார் என
குற்றஞ்சாட்டுகின்றனர் இன்னொரு பகுதியினர்.
கடந்த வருடம் ஷூக்கர் பேர்க்கின் மொத்த சம்பளம் 1.5 மில்லியன் அமெரிக்க
டொலர்கள். (ஊக்குவிப்புக் கொடுப்பனவு உட்பட)எனினும் அடுத்த வருடம் முதல்
அப்பிளின் ஸ்டீவ் ஜொப்ஸைப் போல ஒரு டொலரை மட்டுமே ஊதியமாகப்
பெறப்போவதாகவும் ஷுக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.
தனது நிதி திரட்டலுக்கான காரணம் சிறப்பான சேவைக்கே தவிர, பணம்
பெறுவதற்காக அல்ல “we don’t build services to make money; we make money
to build better services.” எனவும் தெரிவித்துள்ளார்.

