ஆதி காலத்திற்கு செல்லும் விவசாயிகள்: எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி

news
 குடாநாட்டில் கிராமப்புறங்களில் கடந்த சில வருடங்களாக கவனிப்பாரின்றி இருந்த மாட்டு வண்டிகள், கலப்பைகள் ஆகியவற்றை மீண்டும் சீர் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கிராமப்புறங்களில் பாவனையில் இருந்த மாட்டு வண்டில்கள், கலப்பைகள் என்பவற்றை அண்மைக் காலமாக விவசாயிகள் பாவிப்பதில்லை நவீன இயந்திரங்கள் குடா நாட்டில் அறிமுகமானதால் இவற்றின் பாவனை முற்றாகக் கைவிடப்பட்டது. இதனால் இவை வீட்டின் பின்புறங்களில் கிடப்பில் போடப்பட்டன.
 
 கலப்பைகளைப் பயன்படுத்தி முன்னர் நிலங்களை உழுது வந்த விவசாயிகள் தற்போது உழவு இயந்திரங்களையே அதிகம் நாடுகிறார்கள். அதே போன்று வயல்களுக்கும் சந்தைகளுக்கும் பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டு வந்த மாட்டு வண்டிகளும் லான்ட் மாஸ்டர்களின் பாவனையினால் கைவிடப்பட்டன.  முழுமையாகவே இயந்திரங்கள் மூலமான விவசாய நடவடிக்கைகளுக்கு பழகிப் போன விவசாயிகளுக்கு இப்பொழுது வந்து விட்டது சோதனை.
 
எரிபொருள்களின் விலையேற்றம் அவர்களது பொருளாதாரத்தையே ஆட்டம் காணவைத்துவிட்டது. உழவு இயந்திரங்களுக்கான வாடகை, போக்குவரத்துச் செலவு என எல்லாமே உச்ச நிலையில். 
 
இதனால் அவர்கள் மீண்டும் பழைய முறைக்குள் பிரவேசிக்கத் தீர்மானித்துவிட்டனர். இதனால் இதுவரை மூலைகளில் விடப்பட்டிருந்த மாட்டு வண்டிகள், கலப்பை களுக்கு மீண்டும் வந்தது மவுசு.அவற்றை தூசு தட்டி சீர்படுத்தும் நடவடிக்கைகளில் கிராமப் புற விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாட்டு வண்டிகளின் அச்சாணி, கலப்பையின் இரும்புத் தகடு ஆகியவற்றைப் புதிதாகப் பொருத்துவதில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
 
எரிபொருள்களின் அதிகரித்த விலை காரணமாக தமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காலதாமதம் ஏற்பட்டாலும் இவற்றின் மூலம் தமக்கு எந்தவிதமான செலவும் ஏற்படாது எனவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now