இந்திய வீட்டு திட்டத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களையும் உள்வாங்குமாறு 17 முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டாக கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்திய அரசங்கத்தினால் வழங்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் உள்வாங்குமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 17 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கடித்தில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சர்களான றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர்களான அப்துல் காதர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பஷீர் சேகுதாவூத், பைஸர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, ஏ.எச்.எம்.அஸ்வர், பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், ஹுனைஸ் பாரூக், எம்.எஸ்.தௌபீக், கபீர் ஹாசிம், எம்.எஸ்.அஸ்லம் மற்றும் எம்.பி.பாருக் ஆகியோரே கையொப்பமிட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து மனிதாபிமான உதவிகளிலும் பழைய மற்றும் புதிய உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என பாரபட்சம் காட்டாமல் வழங்குமாறும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கிலிருந்து இன ரீதியாக வெளியேற்றப்பட்ட மக்களை 2008 பின்னர் மீள்குடியேற்றவர்களில் உள்வாங்குமாறும் அல்லது வீடமைப்பு திட்டத்திற்காக தெரிவு செய்யும் 20 புள்ளிக்குள் இணைக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், வடக்கில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மனித உரிமை நிறுவனங்கள் கவனத்திற் கொள்ளவில்லை. அத்துடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த புதியவர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த பழையவர்கள் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் பிரித்து பாரபட்சம் காட்டுகின்றது. இதனால் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்கப்பெறுவதில்லை என்பதும் குறித்த கடிதத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெரிவான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக கையொப்பமிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now