உலக சம்பியன்களை ஊதித் தள்ளியது வங்கதேசம்


ஆசிய கிண்ண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கெதிரான தீர்மானமிக்க போட்டியில் பங்களாதேஷ் அணி ஐந்து விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

290 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

மீர்பூர் சேயா பங்களா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணிசார்பாக தமீம் இக்பால் 73 ஓட்டங்களையும், யஹூரூள் இஸ்லாம் 54 ஓட்டங்களையும் பெற்றனர். நஷிர் ஹூசைய்ன் 58 ஓட்டங்களையும், ஷஹீப் அல் ஹசான் 31 பந்துகளில் 49 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

அணித் தலைவர் முஸ்பீகூர் ரஹீம் 25 பந்துகளில் தலா மூன்று சிக்ஸர்கள், பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்றிருந்மை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிசார்பாக பந்துவீச்சில் பிரவீன் குமார் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணிசார்பாக துடுப்பாட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 114 ஓட்டங்களைப் பெற்றதுடன், விராட் கோலி 66 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணிசார்பாக பந்துவீச்சில் மஷ்ரபி மோர்டஷா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சைபுல் இஸ்லாம் மற்றும் அப்துர் ரசாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக பங்களாதேஷ் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவானார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now