வெள்ளை வேன் கடத்தல் பின்னணியில் இராணுவம் - மறுப்பு

வெள்ளை வேன் கடத்தல் பின்னணியில் இராணுவம் - மறுப்புகொழும்பின் புறநகரான கொலன்னாவையில் சனிக்கிழமை மாலை வெள்ளை வேனொன்றில் சென்ற இராணுவத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை வேனில் வந்து தன்னைக் கடத்த முயன்றவர்களை பிரதேச மக்கள் தாக்கியதாக கொலன்னாவை நகரசபைத் தலைவர் ரவீந்திர உதயஷாந்த பீபீசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் தனது சகோதரனைக் கடத்திச் சென்று கொன்ற வெள்ளை வேன் குழுவினரே இம்முறை தன்னையும் கடத்திச் செல்ல முயற்சித்ததாக ரவீந்திர உதயஷாந்த குறிப்பிட்டார்.

தன்னைக் கடத்த வந்தக் குழுவில் வவுனியா இராணுவ சிறப்பு அதிரடிப் படையில் கப்டன் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரியும் இருந்ததாக கொலன்னாவை நகரசபைத் தலைவர் கூறினார்.

வேனில் வந்தவர்களை பிடிக்க முயன்ற போது, தன்னை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதன்பின்னர், தானும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ரவீந்திர உதயஷாந்த தெரிவித்தார்.

பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து, இராணுவத்தைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கலுக்காக தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குற்றவாளிகளைக் கொல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள வெள்ளை வேன் குழுவொன்று தவறு புரியாதவர்களைக் கூட பணத்திற்காக கடத்திச் சென்று கொன்றுவிடும் அபாயம் இருப்பதாகவும், தனக்கு நேர்ந்துள்ள அச்சுறுத்தல் குறித்து இராணுவ உயர்மட்டத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கொலன்னாவை நகரசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொலன்னாவை நகரசபைத் தலைவரின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவத் தரப்பு மறுத்துள்ளது.

இராணுவத்தினர் சென்ற வேனொன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான வெல்லம்பிட்டியில், தனிப்பட்டத் தேவைக்காக தரித்து நின்றபோதே, அங்கிருந்த மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக இலங்கை இராணுவம் சார்பில் பேசவல்ல அதிகாரி பிரிகேடியர் ஜீ.வி.ரவிப்பிரிய தமிழோசையிடம் கூறியுள்ளார்.

ஆட்கடத்தல் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் பிரிகேடியர் ஜீ.வி. ரவிப்பிரிய சுட்டிக்காட்டினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now