ஈரான் தேர்தலில் மதத் தலைவர் கமேனிக்கு பெரும் வெற்றி-அதிபர் அகமதிநிஜாத் சறுக்கினார்


ஈரானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் ஆதரவாளர்கள் தான் 75 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாதுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் அதிபரும், நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு பகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் அகமதிநிஜாத். ஆனால், தனது உத்தரவே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார் கமேனி. ஈரானைப் பொருத்தவரை அதிபரும், நாடாளுமன்றமும் உள்நாட்டு பொருளாதார விவகாரங்களை மட்டுமே கண்காணிக்கும் அதிகாரம் கொண்டுள்ளனர். வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய விவகாரங்கள் கமேனியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அமெரிக்காவுடனான அணு ஆயுத விவகார மோதலுக்கு இடையே நடந்த ஈரான் நாட்டுத் தேர்தலில் அகமதிநிஜாதின் ஆதரவாளர்கள் 25 சதவீதத்தினர் மட்டுமே வென்றுள்ளனர். இந்தத் தேர்தலில் அகமதிநிஜாதின் சகோதரி பர்வீன் கூட தோற்கடிக்கப்பட்டுவிட்டார். நாடாளுமன்றம் கிட்டத்தட்ட கமேனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதனால் கமேனியை மீறி முக்கிய கொள்கைகள் முடிவுகள், திருத்தங்கள் எதையும் அகமதிநிஜாதால் கொண்டு வந்துவிட முடியாது.

இந் நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் இதே நிலை நீடித்தால் அகமதிநிஜாத் வெல்வது கஷ்டமே.

கடந்த 2008ம் ஆண்டு தேர்தலில் கமேனி மற்றும் அகமதிநிஜாதின் ஆதரவாளர்கள் கூட்டாகவே தேர்தலை சந்தித்து பெருவாரியான இடங்களில் வென்றனர்.

ஆனால், கமேனியின் தீவிர மதவாத கருத்துக்களை எதிர்த்து வரும் அகமதிநிஜாத், நாட்டில் சில முக்கிய அரசியல் திருத்தங்களைக் கொண்டு வரவும், அரசியலையும் மதத்தையும் கொஞ்சம் பிரித்து வைக்கவும் விரும்புபவர். ஆனால், இது தங்களது அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக கமேனி மற்றும் மதத் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால், இந்தத் தேர்தலில் அகமதிநிஜாத் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை வைத்து வெற்றியும் பெற்றுவிட்டனர்.

அதே நேரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், அணு ஆயுத விவகாரங்களில் கமேனிக்கும் அகமதிநிஜாதுக்கும் இடையே ஒரே நிலைப்பாடு தான் உள்ளது. இதனால், இந்தத் தேர்தல் முடிவுகளால் அணு ஆயுத விவகாரத்தில் ஈரானின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

அதே நேரத்தில் நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், அடுத்த ஓராண்டுக்கு அகமதிநிஜாத் அதிகாரம் குறைக்கப்பட்ட ஒரு அதிபராகவே பதவியில் நீடிக்க முடியும்.

இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்களான மிர்ஹோசைன் மெளசாவி, மெஹ்தி கரெளவ்பி ஆகியோரின் கட்சிகள் போட்டியிடவில்லை. காரணம், இந்த இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால். இவர்கள் வீட்டுக் காவலில் உள்ளதற்குக் காரணம், கடந்த 2009ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அகமதிநிஜாதை எதிர்த்துப் போட்டியிட்டதால்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now