ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரிட்டனுக்கு செல்வோர் அங்கு திருமணம் செய்யத் தடை

பிரிட்டனில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக செல்லும் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு திருமணம் செய்துகொள்வதை பிரித்தானிய அதிகாரிகள் தடை செய்யவுள்ளனர்.

வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமை பெறுவதற்காக ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.

ஜூலை 27 முதல் ஓகஸ்ட் 12 வரை  நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேருக்கு 6 மாத காலத்திற்கான பிரித்தானிய விஸா வழங்கப்படவுள்ளது.

எனினும் அவர்கள் திருமணம் மற்றும் வேறு வகையான சிவில் வாழ்க்கை பந்தங்களில் இணைவது தடுக்கப்படும். அத்துடன் பிரிட்டனில் கல்வி கற்பதற்கு விண்ணப்பிப்பதும் தடுக்கப்படவுள்ளது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளும் பயங்கரவாதிகளும் பிரிட்டனை இலக்கு வைப்பதற்கு ஒலிம்பிக்கை பயன்படுத்தலாம் என்ற கருத்துக்களின் மத்தியில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பொதுநலவாய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய கெமடூனைச் சேர்ந்த 16 வயது இளைஞர்கள் இருவர் மன்செஸ்டர் விமான நிலையத்தில் வைத்து தலைமறைவாகினர். மன்செஸ்டர் நகரில்நடைபெற்ற 2002 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பின்னர் சியரா லியோனைச் சேர்ந்த சுமார் 30 பேர், தலைமறைவாகியமை  குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரிட்டனுக்குச் செல்வோர் 6 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்க மாட்டார்கள் என்பதற்கும் அங்கு தொழில்வாய்ப்பு எதையும் பெற மாட்டார்கள் என்பதற்கும் தங்கிருக்கும் காலத்திற்கான செலவுக்கும் திரும்பி வருவதற்கான செலவுக்கும் போதிய பணத்தை கொண்டுள்ளார்கள் என்பதற்கும் ஆதாரங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிட்டனில் தங்கியிருப்பதிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளையாட்டுப் போட்டியாளர்கள், பயிற்றுநர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு 204 தேசிய ஒலிம்பிக் குழுக்களுக்கு பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now