ஆசிய
கிண்ண கிரிக்கட் போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
இதில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வெற்றி பெற
வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா களமிறங்கும்.
இந்தியா,
பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும் 11வது
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இதில் இன்று நடக்கும்
லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
இலங்கைக்கு
எதிரான முதல் லீக் போட்டியில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற
இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்துக்
கொள்ளக்கூடாது. இதற்கேற்ப கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், விராத்
கோஹ்லி இன்றும் அபார ஆட்டத்தை தொடர வேண்டும்.
கடந்த
33 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கும் முயற்சியில் தோற்று வரும் சச்சினுக்கு,
இன்று நல்ல நாளாக அமையட்டும். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக 100வது
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணித்தலைவர்
தோனி, ரெய்னா ஆகியோருடன் ரோகித் சர்மாவும் வேகமாக ஓட்டங்கள் சேர்க்க
வேண்டும். தொடர்ந்து ஏமாற்றி வரும் ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் இன்று
யூசுப் பதான் களம் காணலாம்.
இருப்பினும்
அவுஸ்திரேலிய தொடரில் இருந்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல்,
இருக்கும் மனோஜ் திவாரிக்கு இன்றும் இடம் கிடைப்பது சிக்கல் தான்.
வேகப்பந்து
வீச்சில் இர்பான் பதான், வினய் குமார் அணிக்கு தேவையான நேரங்களில்
விக்கெட் வீழ்த்துவது சாதகமானது. இலங்கையுடன் ஏமாற்றிய பிரவீண் குமார்,
இன்று எழுச்சி பெறலாம். இந்த கூட்டணியில் டின்டா இணைவது சந்தேகமே. சுழலில்
அஷ்வின் தனது வேலையை சரியாகச் செய்வதால், ராகுல் சர்மா வேடிக்கை பார்க்க
வேண்டியது இருக்கும்.
பாகிஸ்தானுக்கு
எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்டது
வங்கதேசம். இது இந்த வீரர்களின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியது.
இதனால்
இன்று கூடுதல் கவனத்துடன் விளையாட காத்திருக்கின்றனர். தமிம் இக்பால்,
சாகிப் அல் ஹசன் ஆகியோருடன், இம்ருல் கைய்ஸ், நஜிமுதீன், ஆல் ரவுண்டர்
நாசர் ஹொசைன், அணித்தலைவர் முஷிபிகுரும் ஓட்டங்கள் எடுக்க முயற்சிக்கலாம்.
இந்திய
துணைக்கண்டத்து ஆடுகளங்களின் தன்மை குறித்து வங்கதேச வீரர் மொர்டசாவுக்கு
நன்கு தெரியும். இவரது அனுபவம் கைகொடுத்தால், இந்திய அணியை ஓட்டங்கள்
எடுக்கும் வேகத்துக்கு தடை போடலாம். இது தவிர, அப்துல் ரஜாக், சபியுல்
இஸ்லாம், மகமதுல்லாவும் பந்துவீச்சில் சாதிக்க முயற்சிக்கலாம்.
இன்றைய
போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான
இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம். அதேநேரம் சொந்த மண்ணில்
சாதித்துக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கதேச அணியும்
வெற்றிக்கு கடுமையாக போராடும்.