ஆசிய வலயத்திலுள்ள மிக முக்கியமான நாடுகளையும் கிழக்கு ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய பகுதிகளையும்
5000km தூரம் வரை விரைந்து சென்று தாக்கக் கூடிய அக்னி 5 ஏவுகணையினை
இந்தியா நேற்று வியாழக்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இப்பரிசோதனை உலக
நாடுகள் பலவற்றையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும்
இவ்வேளையில் ஆசியக் கண்டத்தின் ஆளுமை மிக்க வல்லரசான சீனா இது பற்றி
அலட்டிக் கொள்ளாமல் மிகச் சாதாரணமாக இப்பரிசோதனையை விமர்சித்துள்ளதுடன்
இந்தியா தனக்குப் போட்டியல்ல என்றும் கூறியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகி
ஜெனரல் V K சரஸ்வத் இப்பரிசோதனைப் பற்றி கருத்துரைக்கையில் இந்தியாவிடம்
தற்போது மிகுந்த திறனுள்ள ஏவுகணைகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும்,
கட்டமைப்பதற்கும், விற்பனை செய்வதற்குமான வல்லமை உள்ளது. இன்று நாம் ஒரு
ஏவுகணை வல்லரசாகியுள்ளோம். என்று கூறினார். இதேவேளை இப்பரிசோதனை குறித்து
பீஜிங்கின் அரச ஊடகத்தால் கருத்துரைக்கப் பட்ட போது இரு நாடுகளும்
ஏவுகணைகளைப் பரிசோதிப்பதற்கு மாறி மாறிப் போட்டியிடவில்லை என்றும் இரு
நாடுகளுமே இதைத் தமது பலத்தை நிரூபிப்பதற்கான கொண்டாட்டமாகவே இதைக் கருத
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் சீனாவின் வேறு சில ஊடகங்கள் தகவல்
அளிக்கையில் இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்து சீனா அச்சப்படாது என்ற
போதும் இது அதன் இன்னொரு ஆயுதப் பரிசோதனைக்கான சந்தர்ப்பத்தை கிழக்காசிய
வலயத்தில் ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளன.
சீனாவின் வெளிவிவகார அமைச்சிற்கான பேச்சாலர் லியூ வெய்மின் பீஜிங்கில்
இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்றின் போது கருத்துரைக்கயில் சீனா
இந்தியாவின் அக்னி 5 பரிசோதனை பற்றிய குறிப்புக்களை எடுத்திருப்பதாகவும்
சமீபத்தில் டெல்லியில் இடம்பெற்ற BRICS கூட்டத்தின் போது இரு தரப்பு
தலைவர்களும் தமக்கிடையேயான இராஜ தந்திர மூலோபாய பங்குகளைப் பகிர்ந்து
கொண்டிருப்பதுடன் இரு நாடுகளுக்குமிடையேயான உறவினையும்
வலுப்படுத்தியுள்ளோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் அக்னி 5 ஏவுகணையின்
வீச்சு மிக அதிகமே என்று கேள்வியெழுப்பப் பட்ட போது லியூ கூறிய பதில் இரு
நாடுகளுமே வளர்ந்து வரும் சக்திகள். போட்டியாளர்கள் அல்ல. நாங்கள்
கூட்டுறவு பங்குதாரர்கள். இக்கூட்டுறவின் மிகக் கடினமாக உழைப்பின் மூலம்
கட்டியெழுப்பப் பட்டுள்ள உந்துதலை இரு தரப்புமே நினைவில் நிறுத்தி வைத்துக்
கொள்ள வேண்டும்.
மேலும் இப்பரிசோதனை ஆசிய வலயத்திலுள்ள நாடுகளின் பாதுகாப்பு
உத்தரவாதத்தை உடைப்பதாக உள்ளதே என வினவப் பட்ட போது லியூ ஆசிய நாடுகள்
தமக்கிடையே நட்புறவு கொண்டிருப்பதாகவும் இவ்வலயத்தில் சமாதானமும்
சமவல்லமையும் திகழ்வதற்கு அவர்கள் எப்போதும் கை கோர்க்க முடியும் எனவும்
பதிலளித்தார்.
எனினும் லியூவின் கருத்துக்கு மாறாக சீனாவிலிருந்து வெளி வரும் குளோபல்
டைம்ஸ் பத்திரிகை சீனாவின் அணுசக்தி வல்லமை மிக உறுதியானது மற்றும்
அச்சுறுத்தல் அற்றது என்றும் இந்தியாவின் ஏவுகணைகள் மிகுந்த தூரம் பயணித்து
சீனாவின் பல பகுதிகளையும் தாக்கக் கூடியனவாயிருப்பினும் சீனாவின் பதிலடியை
அவர்கள் தாங்க முடியாது எனவும் இந்தியா சீனாவின் அணுசக்தி ஆற்றலுக்குக்
கிட்ட நெருங்கக் கூட முடியாது எனவும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி
தெரிவித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செய்தியில் மேலும்
தெரிவித்திருப்பதாவது இந்தியா தனது வல்லமையை மீள் பரிசோதனை செய்து
பார்த்துக் கொள்ளட்டும். சீனாவின் சக்தி பற்றி அவர்கள் மிகத் தெளிவாக
இருப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.