தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உட்பட நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும்
மூடி மறைக்க இன வாதத்தையும் மத வாதத்தையும் அரசாங்கம் தூண்டி விடுகின்றது.
இதற்கு எதிராகவும் நாட்டின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் அனைத்து இன மக்களும்
ஒரணியில் திரண்டு போராட வேண்டும்.
|
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக மக்கள் முன்னணி
மற்றும் புதிய இடதுசாரி முன்னணி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும்
அமைப்புக்களும் ஒன்றிணைந்து யாழில் நடத்தும் மேதினக் கூட்டம் முக்கிய
திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன
தெரிவித்தார்.
ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எம்.பி. யாழில் நடைபெறுகின்ற
மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அச் செயற்பாடானது
கரும் புலிகளுக்கும் பிரிவினை வாதத்திற்கும் துணை போகக் கூடியது. எனவே அக்
கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கடிதம் மூலமாக எம்மிடம் கேட்டுக்
கொண்டார்.
தந்தை வழியே பிள்ளையினதும் வழி என்பார்கள். ஆனால் இங்கு தந்தையான முன்னாள்
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கொள்கைகளுக்கு முரணான வகையிலும் தற்போதைய
மக்கள் விரோத ஆட்சியின் பாதுகாவலனாகவுமே சஜித் பிரேமதாச எம்.பி.
செயற்படுகிறார். இவர்களிடம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து
பேசுவதில் நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்
பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இன ஐக்கியத்திற்கு முரணானதாகவே
யாழில் நடைபெறுகின்ற எதிர்க்கட்சிகளின் மே தினக் கூட்டம் அமைகின்றது என்று
கொழும்பு அரசாங்க தரப்பினர் பிரசாரம் செய்கின்றனர்.
தற்போது இலங்கை
போலியான நடவடிக்கைகளினால் படுபாதாளத்தில் விழுந்துள்ளதுடன் நாட்டில் நிதி
நெருக்கடி ஏற்பட்டு அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிவாரணங்களும் குறைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம்
இனவாதத்தைத் தூண்டி விட்டு அரசு பிரச்சினைகளை மூடி மறைக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டம்
போன்றவற்றுக்கு எதிராக அரசு நாடு பூராகவும் பிரசாரங்களை செய்கின்றது.
தம்புள்ளையில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டு ஸ்தலங்களை மூடிவிடுமாறு
வலியுறுத்தப்படுகின்றது.
எனவே நாட்டில் பிரச்சினைகள் நாளுக்கு நாள் உக்கிரமம் அடைந்து இன மத
பேதங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இதனை அனுமதிக்க முடியாது. நாட்டைப்
பாதுகாக்கவும் பொது மக்களின் எதிர்காலத்தை உறுதி செய்யவும் அனைத்து
எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.
|
அனைத்து பிரச்சினைகளையும் மூடி மறைக்க இன வாதத்தையும் மத வாதத்தையும் அரசாங்கம் தூண்டி விடுகின்றது: விக்கிரமபாகு கருணாரட்ன.
Labels:
அரசியல்