ஐ.பி.எல். ஐ எதிர்த்ததன் காரணமாகவே ரணதுங்க பதவி விலக்கப்பட்டார்?

இலங்கைக் கிரிக்கெட் சபைத்தலைவராக அர்ஜுன ரணதுங்க பதவி வகித்தபோது அவரது பதவியிலிருந்து அவர் குறுகிய காலத்தில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஐ.பி.எல் போட்டிகளை அவர் எதிர்த்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில இணையத்தளம் ஒன்றே இவ்வாறு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கிரிக்கெட் சபையில் ஆவணங்களை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில் இலங்கை அரசுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கிய அழுத்தத்தின் காரணமாகவே இலங்கைக் கிரிக்கெட் சபைத்தலைவர் பதவியிலிருந்து அர்ஜுன ரணதுங்க நீக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியக் கிரிக்கெட் சபை மீதும், அதன் இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் மீதும் கடுமையான விமர்சனத்தைக் கொண்டவரான அர்ஜுன ரணதுங்க, வெளிப்படையாகவே அவற்றிற்கு எதிராக விமர்சித்து வந்தார்.

2009ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் சபை இந்தியன் பிறீமியர் லீக் தொடரை நடாத்திய போது இலங்கை வீரர்களும் அத்தொடரில் பங்குபெற ஒப்பந்தம் செய்யப்பட்டனர். எனினும் அக்காலப்பகுதியில் இங்கிலாந்தில் டெஸ்ற் தொடரொன்றை நடாத்த இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை விரும்பியது.

அதன் காரணமாக இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலிருந்து ஆரம்பத்திலேயே திரும்பி இங்கிலாந்து டெஸ்ற் தொடரில் பங்குபற்றுமாறு அர்ஜூன ரணதுங்க இலங்கை வீரர்களுக்கு அழுத்தத்தை வழங்கினார். அதனை இலங்கை வீரர்களும் எதிர்த்தனர்.

இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, பாங்கொக்கில் வைத்து இந்தியக் கிரிக்கெட் சபை அதிகாரிகளைச் சந்தித்து எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அர்ஜுன ரணதுங்க இலங்கைக் கிரிக்கெட் சபைத்தலைவராகக் காணப்படும் வரை இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே அர்ஜுன ரணதுங்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் அவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now