இலங்கை சென்று என்ன செய்வீர்கள் - சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதில்கள்

இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 15 எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்று இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு கிடைப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய இலங்கை செல்கின்றது.

இந்தப் பயணத்தை எம்.பி.க்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வார்கள் என்று குழுவில் இடம்பெற்ற எம்.பி.க்கள் சிலரிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில்:

சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக):
எம்.பி.க்கள் குழுவுக்குத் தலைமையேற்றுச் செல்வதால் இந்தியக் குழுவின் தலைவராகவே நான் கருதப்படுவேன். அதனால், வெளியுறவு அமைச்சகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலையில் முடிந்தவுடன்தான் இலங்கைப் பயணத்தின் திட்டம், பாஜகவின் நிலை எப்படி இருக்கும் என்பதை விவரிக்க இயலும். ்

என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்):
இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு இந்திய அரசு அளித்த நிதியுதவி, நலத்திட்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்வோம். முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களில் மூவாயிரம் பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். மற்றவர்கள் பூர்வீகப் பகுதிகளுக்குத் திரும்பி விட்டனர் என்று ஓராண்டுக்கு முன்பே இலங்கை அரசு கூறியது. அது உண்மையான தகவலா என்பதை நேரில் உறுதி செய்வோம்.

பயணம் குறித்து பிரதமரிடம் அறிக்கை அளிப்போம். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் தனியாக ஒரு அறிக்கை தயாரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மூலம் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அளிப்போம்.

பல்பீர் புஞ்ச் (பாஜக):
இலங்கைத் தமிழர் பிரச்னையை இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக எழுப்பி வருகிறது. அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்குச் சம வாய்ப்பும் உரிமையும் கிடைக்க வேண்டும். இதை மனத்தில் கொண்டு தமிழர்களின் நிலைமையைக் கண்டறிவோம்.

டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக):
இலங்கையில் தமிழர் பகுதியில் மறுவாழ்வுத் திட்டங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இலங்கைப் பயணத்தின்போது அவற்றை ஆய்வு செய்வேன். இந்திய அரசால் அளிக்கப்படும் உதவிகள் அவர்களுக்குச் சரியான வகையில் போய்ச் சேருகின்றனவா என்பதையும் உறுதி செய்வோம். திமுக எம்.பி. என்ற முறையில் பயணத்தின்போது நான் மதிப்பீடு செய்த அறிக்கையை எங்கள் கட்தித் தலைவரிடம் அளிப்பேன்.

டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):
இலங்கை பிரச்னைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யான டி. ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல். திருமாவளவன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இலங்கைப் பயணத்தின்போது போரினால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த பகுதிகளை இந்தியக் குழு பார்வையிடும். அங்குள்ள மக்களின் நிலையைக் காண்போம். பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் வெளியிடும் குறைகள், சந்திக்கும் பிரச்னைகளைக் கண்டறிவோம். இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலருடனும் பேசுவோம்.

இவர்களிடம் பேசிய பிறகு கடைசியாக இலங்கை அதிபர் மஹிந்தவை சந்திப்போம். நாங்கள் நேரில் கண்ட நிலைமைகளை அவரிடம் விளக்குவோம். குறைகள் இருந்தால் நேரிலேயே அவற்றை முறையிட்டு விளக்கம் கேட்போம்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now