மஹிந்த சிந்தனையின் முழுமையடையாத வீதி அபிவிருத்திகள்

மஹிந்த சிந்தனையின் கமநெகும, மகநெகும வேலைத் திட்டங்களின் கீழ் தோட்டப் பாதைகள் கொங்கிறீட் போட்டு அபிவிருத்தி செய்யப் படுகின்ற போதிலும் அவை முழுமையடையாது பயன்பாட்டுக்கு உரித்தானதாக இல்லை என தோட்டத் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, குடிநீர், மலசல கூடம் போன்ற பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். தோட்டப் பாதைகள் தெரிவு செய்யப்பட்டு சில அடி தூரம் மட்டுமே கொங்கிறீட் போட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன் எஞ்சிய பகுதி கைவிடப்பட்ட நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் முழுமையான பயனைப் பெற முடியாதுள்ளனர்.

மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் முற்றுப் பெறாத நிலையில் காணப்படுகின்றன. நோயாளி ஒருவரை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் கொங்கியட் போடப்பட்டுள்ள பகுதி வரையில் மட்டுமே பயணஞ் செய்ய முன்வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் அவசரத் தேவையின் போது முச்சக்கர வண்டியைத்தானும் பயன்படுத்த முடியாது பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி மேற்கொள்ளப்படும் அபி விருத்திப் பணிகளில் பல ஊழல் மோசடி களும் இடம் பெற்று வருவதாகக் கூறப் படுகின்றது. தரக்குறைவான முறையில் கொங்கிறீட் கலவை மேற்கொள்ளப்பட்டு போடப்படுவதால் குறுகிய காலத்தில் அவை கழன்று மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுகின்றது. அத்துடன் குறிப்பிட்ட ஒரு தூரத்துக்கு கொங்கியட் போடும் போது இடையில் விட்டு விட்டு போடப்பட்டுள்ள மையையும் காண முடிகிறது. இத்தனைக்கும் தோட்டத் தொழிலாளர்களையும் அபிவிருத்திப் பணியில் சம்பந்தப்படுத்தி அவர்களும் சிரமதானப் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, றைகம் மேற்பிரிவின் பிரதான பாதை தார் போட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும் பாதையின் ஒரு பகுதி இடையில் கைவிடப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனமோட்டிகள் இவ்விடத்தைக் கடந்து செல்வதில் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். இங்குள்ள வீடமைப்புத் திட்டத்துக்கான பாதையும் இடையில் விட்டு விட்டு கொங்கிறீட் போடப்பட்டுள்ளது.

ஹொரணை எல்லகந்த தோட்டப் பாதை சுமார் 18 இலட்சம் ரூபா செலவில் வாகனச் சில்லுகள் படும் இரு பகுதி மட்டுமே கொங்கியட் போட்டு நடுவில் கான் போன்று காணப்படுவதால் வேன், லொறி, உழவு இயந்திரம் போன்ற வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடிகிறது. முச்சக்கர வண்டி பயணிக்க முடியாதுள்ளது.

இதனால் திடீர் நோயாளி ஒருவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதில் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். பாதை நடுவில் கான் போன்று காணப்படுவதால் முச்சக்கர வண்டி பயணிக்க முடியாதுள்ளது. மழைக் காலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து கான் வழியாக ஓடுவதால் பாதை அரித்து குழியாக மாறியுள்ளது. அத்துடன் மிகவும் தரக்குறைவான முறையில் கொங்கிறீட் போடப்பட்டுள்ளதால் குறுகிய காலத்தில் கொங்கியட் கழன்று குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

பல இலட்சம் செலவில் வித்தியாசமான முறையில் கொங்கிறீட் போட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இப்பாதையால் தோட்ட மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடையாது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உறுதியானதாகவும், உருப்படியானதாகவும் நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடியதாகவும் அமையப் பெறுதல் வேண்டும். பெருந்தொகையான நிதியைச் செலவு செய்து தரக்குறைவாக மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் அழிந்து போகும் திட்டங்களால் மக்களுக்கு பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now