இடம்பெற்றுவரும்
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின்
கெவின் பீற்றர்சன் - நடுவர்களால் எச்சரிக்கப்பட்டார். "ஸ்விற்ச் ஹிற்" என
அழைக்கப்படும் புதியவகைத் துடுப்பாட்டம் தொடர்பாகவே அவர்
எச்சரிக்கப்பட்டார்.வலதுகைத் துடுப்பாட்ட வீரர் இடதுகைத் துடுப்பாட்ட வீரராக மாறியும், இடதுகைத் துடுப்பாட்ட வீரர் வலதுகைத் துடுப்பாட்ட வீரராக மாறியும் துடுப்பெடுத்தாடும் இந்த வகைத் துடுப்பாட்டத்தை கெவின் பீற்றர்சன், அவுஸ்திரேலியாவின் டேவிட் வோணர் உட்பட சில வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த ஆட்டமுறை குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்தாலும், பொதுவாக இதற்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
எனினும் இன்றைய போட்டியில் கெவின் பீற்றர்சன் "ஸ்விற்ச் ஹிற்" முறையில் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தார். அதன் போது டில்ஷான் வீசிய ஓர் ஓவரில் டில்ஷான் இரண்டாவது பந்தை வீச முற்பட்ட போது கெவின் பீற்றர்சன் முன்னதாகவே "ஸ்விற்ச் ஹிற்" இற்கு தயாராகினார். அதைக் கண்ட டில்ஷான் தனது பந்துவீச்சை நிறுத்தி மீளப் பந்துவீசினார். இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு பந்து பின்னதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ண டில்ஷான் ஆகியோர் நடுவரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர். அது கெவின் பீற்றர்சனின் "ஸ்விற்ச் ஹிற்" தொடர்பாகவே அமைந்தது எனக் கருதப்படுகிறது.
அதன் பின்னர் அவ் ஓவரின் ஐந்தாவது பந்தை வீச டில்ஷான் முற்பட்டபோது கெவின் பீற்றர்சன் மீண்டும் "ஸ்விற்ச் ஹிற்" ஐ ஆட முனைந்தார். அதைக் கண்ட டில்ஷான் மீண்டும் பந்துவீசுவதை நிறுத்தினார். திரும்பப் பந்துவீச டில்ஷான் முனையும் போது மீண்டும் கெவின் பீற்றர்சன் "ஸ்விற்ச் ஹிற்" ஐ ஆட முனைய டில்ஷான் மீண்டும் தனது பந்துவீச்சை நிறுத்தினார்.
டில்ஷான் அவ் ஓவரில் 3ஆவது முறையாகவும் தனது பந்துவீச்சை இடைநிறுத்தியதைக் கண்ட நடுவர் - கெவின் பீற்றர்சனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
விதிகளின்படி பந்துவீச்சாளர் தனது பின்னங்காலை பந்துவீச நிலத்தின் ஊன்றிய பின்னரே ஒரு துடுப்பாட்ட வீரரால் "ஸ்விற்ச் ஹிற்" இற்காக தன்னைத் தயார்படுத்த முடியும். அதற்கு முன்னதாக கெவின் பீற்றர்சன் "ஸ்விற்ச் ஹிற்" இற்காக முயற்சித்தார் எனத் தெரிவித்தே நடுவர் எச்சரிக்கை விடுத்தார்.
இன்னுமொருமுறை கெவின் பீற்றர்சனோ அல்லது ஏனைய இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரரோ இந்த இனிங்ஸில் அவ்வாறு தவறாக "ஸ்விற்ச் ஹிற்" ஐ ஆட முனைந்தால் இங்கிலாந்து அணியின் ஓட்டங்களிலிருந்து 5 ஓட்டங்கள் கழிக்கப்படும் எனவும் உத்தியோகயூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் மீள் ஒளிபரப்புகளில் கெவின் பீற்றர்சனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மூன்றாவது தடவை அவர் விதிகளுக்கு அமைவாகவே "ஸ்விற்ச் ஹிற்" இற்கு முயற்சித்தார் எனக் காண முடிந்தது.



