வாழ்வாதாரத்திற்கு உதவி கோரும் யாழ். பொம்மை வெளி முஸ்லீம் மக்கள்

 வாழ்வாதாரத்திற்கு உதவி கோரும் யாழ். பொம்மை வெளி முஸ்லீம் மக்கள்யாழ். பொம்மை வெளிப்பிரதேசத்தில் மீள்குடியமர்ந்த முஸ்லீம் மக்கள் எந்தவித வாழ்வாதார உதவிகளும் இன்றி பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் தேவை எல்லாம் நிரந்தரமாக வாழ்வதற்குரிய இருப்பிடங்களே.

மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இம்மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்ற முடியாமல் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருப்பதாக அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தங்கள் மண்ணில் நிம்மதியாக வாழ்வதற்கு தமக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்து 5 வருடங்கள் கட்ந்துள்ள போதிலும் வாழ்வதற்கான வீடு உட்பட அடிப்படை வசதிகள்,மின்சார வசதிகள் ஏதுமின்றி வாழ்வதாகவும், மீள் குடியமர்ந்து ஆறுமாத காலமாக வழங்கி வந்த நிவாரணமும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீளக்குடியமர்ந்த 330 முஸ்லீம் குடும்பங்களும் பள்ளிவாசலிற்கு சொந்தமான பள்ளக் காணியிலேயே வசித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மக்களிற்கு ஒரு பொதுக் கிணறும் இரண்டு மலசலகூடங்கள் மட்டுமே காணப்படுகின்றது. அத்துடன், குடிப்பதற்கான நீர் குழாய் மூலம் கிடைப்பதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப்பிரதேசத்தினைச் சூழ உள்ள காணிகள் பள்ளக் காணிகளாக இருப்பதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் டெங்கு, மலேரியா போன்ற நுளம்பினால் பரவும் நோய்களும் பரவுகின்றதாகவும், பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இங்குள்ள குடும்பத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்க்ளாக இருப்பதாகவும், இதனால் குடும்ப வருமானம் போதாமல் உள்ளதாகவும், கூறும் பெண்கள், தமக்கு ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பினை பெற்றுத்தந்தால் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையினை குறைத்துக்கொள்வதுடன், தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

மழைகாலங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் கூலி வேலைகளுக்கும் செல்ல முடியாதிருப்பதாகவும், அந்த நேரத்தில் குடும்பத்திலுள்ள குழந்தைகள் கூட பட்டினியுடனே இருப்பதாகவும் குறிப்பிடும் இந்தப் பெண்கள் சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு தமக்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now