சவுதி அரேபிய இளவரசர் அல்வலீத் பின் தலால் அப்துல் அஜீஸ் அல் சவுத்தின்,
கிங்டம் ஹோல்டிங் கம்பெனி என்ற கட்டுமான நிறுவனம், ஜெட்டா நகரில் உலகின்
மிக உயர்ந்த கட்டிடத்தை கட்டும் பணியை விரைவில் தொடங்கப் போவதாக
அறிவித்துள்ளது. இதுபற்றி துபாயில் அப்துல் அஜீஸ் அல் சவுத் நேற்று
கூறுகையில்,
|
"உலகின் மிகப் பெரிய, அதிக தனியார் முதலீட்டு நிறுவனமான கே.எச்.சி
நிறுவனம், ஜெட்டா நகரில் 'கிங்டம் டவர்' என்ற பெயரில் உலகின் மிக உயரமான
(1000 மீட்டர்) கட்டிடத்தை கட்டும் பணியை தொடங்க உள்ளது. அதன் கட்டுமான
பணிகள் 63 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு 460
கோடி ரியால் (இந்திய ரூபாயில் ரூ.6,330 கோடி) செலவாகும் என தெரிகிறது"
என்றார்.
இந்த கட்டுமான திட்டத்தில் சவுதி பின் லேடன் குழுமம் (எஸ்.பி.ஜி) ரூ.2,065
கோடி முதலீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால்
கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் குடும்பத்துக்கு
சொந்தமானது எஸ்.பி.ஜி. இப்போது, துபாயில் உள்ள 829.84 மீட்டர் உயரமுள்ள
புர்ஜ் கலிபா டவர்தான் உலகின் மிக உயரமான கட்டிடம் என்பது
குறிப்பிடத்தக்கது.
|