மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி அரசியல் அதிரடிகளுக்குப் பெயர் போனவர். இந்நிலையில் அவரது கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கக் காவல்துறை பேஸ்புக் சமூக வலைத்தளத்தை
வம்புக்கு இழுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்யும் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் மம்தாவும், ரெயில்வே அமைச்சர் முகுல்ராயும் இணைந்து முன்னாள் ரெயில்வே அமைச்சரான திரிவேதியை ஒழிக்க திட்டமிடுவது போல பேராசிரியர் அம்பிகேஷ் மகபத்ரா என்பவர் கார்ட்டூன் வரைந்திருந்தார். இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, மம்தாவை கிண்டல் செய்யும் விதமான பல்வேறு படங்கள் தொடர்ச்சியாக பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து மம்தா பானர்ஜியைக் கிண்டல் செய்யும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ள படங்களை அகற்ற வேண்டும் என சமூக வலைத்தளமான பேஸ்புக் நிர்வாகத்திற்கு மேற்குவங்க சி.ஐ.டி உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தகைய படங்கள் முதலில் எந்த கணிணியிலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை வழங்குமாறும் சி.ஐ.டி கோரியுள்ளது.
இதற்கிடையே மேற்கு வங்க கம்யூனிசக் கட்சியினருடன் திருமண உறவு உள்ளிட்ட எவ்வகையான தொடர்புகளையும் தனது கட்சிக்காரர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இன்னொரு அதிரடி உத்தரவை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அவ்வாறு வைத்துக் கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கட்சி தனது தொண்டர்களை எச்சரித்துள்ளது.