யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாளை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நாளை காலை 8.00 மணிக்கு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த 14ம் திகதி ஆரம்பமான ஒத்திகை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இம்முறை நடைபெறவுள்ள வெற்றி அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 13,680 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களில் 852 அதிகாரிகளும், 12,828 முப்படை வீரர்களும் அடங்குவர்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது கள முனையில் பயன்படுத்தப்பட்ட சகல கனரக ஆயுதங்கள், ஆயுத தாங்கி வாகனங்கள், கவச வாகனங்கள், சமிக்ஞை கருவிகள் போன்ற இராணுவத்தின் 148 வாகனங்களும், கடற்படைக்குச் சொந்தமான 72 யுத்தக் கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள் மற்றும் அதிவேக படகுகளும், விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் காலி முகத்திடல் கடல் மற்றும் வான் பரப்பில் சாகசங்களை காண்பிக்கவுள்ளன.
நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து தாய் நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் போது உயிர் நீத்த படை வீரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 முப்படை வீரர்களுக்கு இந்த அணிவகுப்பின் போது பரம வீரவிபூஷண விருது வழங்கப்படவுள்ளன.

