பகிரங்கமாக
அரசியலில் நுழைவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதாபய
ராஜபக்ஷ, அதற்காக தமக்கு களனி தொகுதியின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
அமைப்பாளர் பதவி வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ள
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
பகிரங்கமாக அரசியலில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் மறுத்துவந்த
பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியினதும், ஜனாதிபதி பாரியரதும்,
ஜனாதிபதியின் மகன்மார் மூவரதும் மறுக்கமுடியாத வேண்டுகோளுக்கமைய அரசியலில்
பகிரங்கமாக ஈடுபடத் தீர்மானித்துள்ளார்.
அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய
ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவியை வழங்க தீர்மானித்துள்ள ஜனாதிபதி, அதற்கு
முன்னர் அவரை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவர
எதிர்பார்த்துள்ளார்.
கோதாபய ராஜபக்ஷவிற்கு களனி தொகுதியின் அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டால்,
தற்போது கம்பஹா மாவட்டத் தலைவரான பசில் ராஜபக்ஷவிற்கு கிழக்கு
மாகாணத்தின் கூட்டமைப்பின் தலைவராக பணியமர்த்த திட்டமிட்டுள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக
செயல்படுவதுடன் வடக்கு கிழக்கின் அபிவிருத்திப் பணிகளை
முன்னெடுத்துவருவதால் பசில் ராஜபக்ஷவை அந்தப் பிரதேசத்தின் கூட்டமைப்புத்
தலைவராக பணியமர்த்துவது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் ஜனாதிபதிக்கு
நம்பிக்கையில்லாததால் பசில் ராஜபக்ஷவை அந்தப் பிரதேசத்திற்கு நியமிப்பது
அனைத்து விதத்திலும் பொருத்தமாக இருக்கும் என ஜனாதிபதி அவருக்கு நெருக்கமான
சிலரிடம் கண்டி ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நேற்று
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரிடம்
கேட்டபோது, பாதுகாப்புச் செயலாளர் கடந்த சில மாதங்களாக களனி தொகுதிப்
பணிகளில் தேவையற்ற விதத்தில் தலையிட்டுவந்ததாகக் குறிப்பிட்டார். எனினும்,
பாதுகாப்புச் செயலாளர் களனி தொகுதியின் அமைப்பாளராக நியமனம் பெறுவார்
என்பது குறித்து எதுவும் இதுவரை அறியவில்லையெனக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், களனி பிரதேச சபை உறுப்பினர்களை அமைச்சர் மேர்வின்
சில்வாவிற்கு எதிராக தூண்டிவிட்டது பாதுகாப்புச் செயலாளர் எனவும், அமைச்சர்
மேர்வின் சில்வாவிற்கு நெருக்கமான சிலரை வெள்ளை வேனில் கடத்தியமை, இன்னும்
இருவரைக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் பாதுகாப்புச்
செயலாளருக்கு நேரடி தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரது உச்சபட்ச
ஆதரவு இருப்பதாகவும், இவ்வாறான நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வாவை களனி
தொகுதியிலிருந்து எவராலும் அசைக்க முடியாது எனவும் அமைச்சரின் இணைப்புச்
செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இருந்த போதிலும், எமக்குக் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, அமைச்சர்
மேர்வின் சில்வாவிற்கும் அவருக்கு நெருக்கமான சிலருக்கும்
அரசாங்கத்தரப்பிலிருந்து
பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதனடிப்படையிலேயே பாதுகாப்புச் செயலாளர் களனி தொகுதி அமைப்பாளராக
நியமிக்கப்படவுள்ளதாகவும் எமக்குத் தகவல் தந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட
அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


