கால்பந்து திருவிழாவான யூரோ கோப்பை நாளை ஆரம்பம்!


வார்சா: உலக கோப்பை தொடருக்கு அடுத்து மிகப் பெரும் கால்பந்து திருவிழாவான யூரோ கோப்பை நாளை ஆரம்பமாகிறது. இதில் சாதிக்க, "நடப்பு சாம்பியன் ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் முன்னணி அணிகள் தயாராக உள்ளன.

யூரோ கோப்பை தொடரில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதனால் தென் அமெரிக்க அணிகளான 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, சிலி போன்ற அணிகளின் அசத்தல் ஆட்டத்தை ரசிகர்கள் காண முடியாது.

இம்முறை 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடரை(ஜூன் 8-ஜூலை 2) போலந்து, உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் பங்கேற்கும் 16 அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அல்லது ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முக்கிய தொடரின் பைனலில் ஸ்பெயினிடம் தோற்று வரும் ஜெர்மனி எழுச்சி கண்டால், புதிய சாம்பியனாக உலா வரலாம். பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளும் சவாலுக்கு தயாராக உள்ளன.

முதல் போட்டி:

நாளை வார்சாவில் நடக்கும் முதல் போட்டியில் "ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன. சொந்த மண்ணில் களமிறங்கும் போலந்து, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்பதே உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 1974, 1982 உலக கோப்பை தொடரில் மூன்றாவது இடம் பெற்ற பெருமைமிக்க போலந்து அணி, சமீப காலமாக சொதப்புகிறது. தற்போது ஐரோப்பாவின் மிகவும் பலவீனமான அணியாக கருதப்படுகிறது."பிபா ரேங்கிங் பட்டியலில் 62வது இடத்தில் உள்ளது. இம்முறை போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் தான் யூரோ கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பையே பெற்றது. 

இப்போட்டி குறித்து போலந்து கேப்டன் குபா பிளாசிக்கோவ்ஸ்கி கூறுகையில்,""முதல் படியை சிறப்பாக எடுத்து வைப்பது முக்கியம். கிரீஸ் அணிக்கு எதிராக அசத்தலாக விளையாடி, உள்ளூர் ரசிகர்களின் பாராட்டை பெறுவோம்,என்றார்.

வலுவான கிரீஸ்:

கிரீஸ் அணியை எடுத்துக் கொண்டால், ரேங்கிங் பட்டியலில் 15வது இடத்தில் <உள்ளது. 2004ல் கோப்பை வென்ற இந்த அணி தகுதிச் சுற்றில் தோல்வியே சந்திக்கவில்லை. மிகவும் வலிமையான கிரீஸ் அணி, மிகச் சுலபமாக வெற்றி பெறலாம். 

இது குறித்து அணியின் கோல்கீப்பர் கோஸ்டாஸ் சால்கியாஸ் கூறுகையில்,"" போலந்தை கண்டு அச்சப்படவில்லை. வெற்றிக்காக நூறு சதவீதம் முயற்சிப்போம். லீக் சுற்றில் சிறப்பாக செயல்படுவது முக்கியம்,என்றார். கால்பந்து 

யாருக்கு வாய்ப்பு

யூரோ கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில்,"" ஒரு "சூட்கேஸ் நிறைய பணம் கொடுத்து, "பெட் கட்டச் சொன்னால் போர்ச்சுகல் அல்லது ஸ்பெயின் அணியைத் தான் தேர்வு செய்வேன். நான் சும்மா சொல்லவில்லை. எங்கள் அணி மீது அந்தளவுக்கு நம்பிக்கை உள்ளது. 

இது நடக்கவில்லை என்றால், ஸ்பெயின் அணிக்கு தான் வாய்ப்புள்ளது. புயோல், டேவிட் வில்லா இல்லையென்றாலும், மற்ற வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால், இந்த அணி எப்படியும் பைனலுக்கு வந்துவிடும்,என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now