இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. கடந்தமுறை இங்கிலாந்து மண்ணில் சந்தித்த தோல்விக்கு, இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் இன்று துவங்குகிறது.
பறிபோன "நம்பர்-1':
கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-4 என, முழுமையாக இழந்து, "நம்பர்-1' இடத்தையும் பறிகொடுத்தது. இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பின், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்களில் அடைந்த தோல்வி காரணமாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று துவங்கவுள்ள டெஸ்ட் தொடரை இந்திய வீரர்கள் பழி வாங்கும் படலமாகவே பார்க்கின்றனர். இதற்கு அணி தயாராக உள்ளதா என்றால், அது சந்தேகம் தான். ஏனெனில், "சீனியர்கள்' டிராவிட், லட்சுமண் ஓய்வுக்குப் பின், இந்திய அணியின் பேட்டிங் பலம், பெரிய அணிகளுக்கு எதிராக சோதிக்கப்படவில்லை.
நம்பிக்கையான துவக்கம்:
அனுபவ வீரர்கள் சேவக், காம்பிர் இருவரும் நல்ல துவக்கம் கொடுத்து வெகு நாளாகி விட்டது. ரஞ்சி கோப்பை போட்டியில் சதம் அடித்த சேவக், காம்பிர் இருவரும் புதிதாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான, இவர்களது துவக்கத்தைப் பொறுத்து தான், "மிடில் ஆர்டர்' வீரர்களின் பேட்டிங் அமையும்.
இளமை எதிர்பார்ப்பு:
டிராவிட் இடத்துக்கு வந்துள்ள புஜாராவுக்கு அனுபவம் குறைவு. லட்சுமண் இடத்திலுள்ள விராத் கோஹ்லி, இந்திய அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக <உள்ளார். இத்தொடரின் பெரிய எதிர்பார்ப்பு "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சமீபத்திய போட்டிகளில் அதிகமாக "போல்டாகி' விமர்சனத்தை சந்தித்தார். இருப்பினும், ரஞ்சி கோப்பை போட்டியில் சதம் அடித்து "பார்மை' மீட்ட நம்பிக்கையுடன் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் களமிறங்குகிறார் யுவராஜ் சிங். "கேன்சரில்' இருந்து மீண்ட இவருக்கு, துலீப் டிராபியில் அடித்த இரட்டை சதம், டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க காரணமானது. ரெய்னாவின் இடத்தை பறித்துள்ள இவர், திறமை நிரூபிக்க வேண்டும். பின் வரிசையில் கேப்டன் தோனி தன் பங்கிற்கு "டெயிலெண்டர்களுடன்' இணைந்து ரன் சேர்க்க வேண்டும்.
"இருவர்' உறுதி:
வேகப்பந்து வீச்சில் மீண்டும் ஜாகிர் கான், <உமேஷ் யாதவ் கூட்டணி மிரட்டலாம். கடைசியாக பங்கேற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஜாகிர் 11, உமேஷ் யாதவ் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அஷ்வின், பிரக்யான் ஓஜா அடங்கிய "இருவர்' கூட்டணிக்குத் தான் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய இவர்கள், மீண்டும் "சுழல்' ஜாலம் காட்டலாம்.
சூப்பர் "பேட்டிங்':
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு திணறும். இம்முறை, "சீனியர்' ஸ்டிராஸ் இல்லாத நிலையில், இங்கிலாந்து அணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், பயிற்சி ஆட்டங்களில் கேப்டன் அலெஸ்டர் குக், பேர்ஸ்டோவ், டிராட், பீட்டர்சன் மற்றும் சமித் படேல் ஆகியோர் சதம் அடித்து "சூப்பர்' பார்மில் <உள்ளனர்.
அறிமுக வீரர் காம்ப்டன், பிரையர், மார்கன் ஆகியோரும் அரைசதம் அடித்து பேட்டிங் பலத்தை நிரூபித்தனர். அதேநேரம், இந்த மூன்று பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து அணிக்கு முதல் தர "ஸ்பின்னர்' மற்றும் "பார்ட் டைம்' வீரர்களின் பவுலிங்கை சந்திக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், தங்களுடைய உண்மையான பலம் தெரியாமல் உள்ளனர்.
ஸ்டீவன் "மிஸ்':
பவுலிங்கை பொறுத்தவரையில் 6 அடி 7 அங்குல உயரம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன், முதல் டெஸ்டில் இல்லாதது பலவீனம் தான். அதேநேரம் ஆண்டர்சன், பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆனியன்ஸ் இணைந்து விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.
சுழலில் அனுபவ வீரர் சுவான், இந்திய வீரர்களுக்கு தொல்லை தரலாம். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் இடம் பெறுவது சந்தேகமே. "பார்ட் டைம்' பவுலர் சமித் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
மைதான ராசி எப்படி
முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஆமதாபாத் சர்தார் படேல் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா என்பது சந்தேகமே. இங்கு பங்கேற்ற 11 டெஸ்டில் 3 வெற்றி மட்டும் தான் கிடைத்தது. 6ல் டிரா செய்த இந்திய அணி, 2 போட்டிகளில் தோற்றது.
* கடைசியாக 2005 டிசம்பரில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது.
* இதன் பின், கடந்த ஏழு ஆண்டுகளில் இங்கு விளையாடிய எந்த டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்றதில்லை.
*இங்கிலாந்துக்கு எதிராக இங்கு விளையாடிய ஒரு (2001) டெஸ்ட் "டிரா' ஆனது.
* அதேநேரம், சமீபத்தில் இந்த ஆடுகளம் மாற்றி அமைக்கப்பட்டு நன்கு உலர்ந்துள்ளது. இதில் வழக்கமான அளவை விட, 20 சதவீத களிமண் குறைவாக சேர்க்கப்பட்டு, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாற்றப்பட்ட ஆடுகளத்தில் இருமுறை மட்டும் 50 ஓவர் போட்டி நடத்தப்பட்டன.
"இருவர்' மட்டும் தான்
முதல் டெஸ்டில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
முதல் டெஸ்டில் சேவக், காம்பிர் தான் துவக்கம் தருவர். கடுமையான போராட்டத்துக்குப் பின் இடம் பெற்ற யுவராஜ் சிங்கின் பேட்டிங் மற்றும் "பார்ட் டைம்' பவுலிங் அணிக்கு உதவும். இவருக்கும், இங்கிலாந்து வீரர் பீட்டர்சனுக்கும் இடையிலான போட்டி ரசிக்கும் விதத்தில் இருக்கும்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கான்பூர் (2008) டெஸ்டில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம். ஏனெனில், ஆடுகளம் அப்படி இருந்தது. இம்முறை அஷ்வின், ஓஜா என "இருவர்' மட்டும் தான். ஆடுகளத்தை பார்வையிட்ட பின், என்ன தேவையோ அதற்கேற்ப முடிவு செய்வோம்.
ஹர்பஜனைப் பொறுத்தவரையில் கடந்த ஒரு ஆண்டாக அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். இப்போது, இடம் பெற்றுள்ளதே பெரிய விஷயம் தான். இவரது அனுபவம், மற்ற இருவருக்கும் உதவும்.
இவ்வாறு தோனி கூறினார்.
நெருக்கடி கொடுப்போம்
ஆமதாபாத் டெஸ்ட் போட்டி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக் கூறியது:
பொதுவாக எந்த தொடரில் சொந்த மண்ணில் பங்கேற்கும் அணிக்குத் தான் அதிக நெருக்கடி இருக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது. இத்தொடரில் இந்திய அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பது தான் எங்களது வேலை. இதற்கேற்ப மூன்று பயிற்சி போட்டிகளில் பங்கேற்று நன்கு தயார் ஆகியுள்ளோம்.
இங்குள்ள ஆடுகளம் தினம், தினம் மாறி வருகிறது. கடைசியாக பார்த்தபோது நன்கு காய்ந்து காணப்பட்டது. தவிர, புதியதாக அமைக்கப்பட்டது என்பதால், பழைய புள்ளி விவரங்கள் இங்கு எடுபடாது. அணியின் நட்சத்திர வீரர் பீட்டர்சன் எங்களது பலம். எந்நிலையிலும் போட்டியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும், இம்முறை வெற்றிக்கு கைகொடுப்பார்.
இவ்வாறு அலெஸ்டர் குக் கூறினார்.
"டிரா' அதிகம்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இங்கிலாந்து 38, இந்தியா 19 போட்டிகளில் வெற்றி பெற்றன. மீதமுள்ள 46 போட்டிகள் "டிரா'வில் முடிந்தன.
* இந்திய மண்ணில் விளையாடிய 51 டெஸ்டில் இந்தியா 14, இங்கிலாந்து 11ல் வெற்றி பெற்றன. 26 டெஸ்ட் "டிரா' ஆனது.
* இங்கிலாந்து மண்ணில் மோதிய 52 டெஸ்டில் இங்கிலாந்து 27, இந்தியா 2ல் வெற்றி கண்டன. 20 டெஸ்ட் "டிரா'வில் முடிந்தன.
14வது முறை
டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி 14வது முறையாக இந்தியா வந்துள்ளது. முன்னதாக இந்திய மண்ணில் 13 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணி 4 முறை (1933/34, 1974, 1979/80, 1984/85) கோப்பை வென்றது. இந்திய அணி ஆறு முறை (1961/62, 1972/73, 1981/82, 1992/93, 2001/02, 2008/09) தொடரை கைப்பற்றியது. மூன்று முறை (1951/52, 1963/64, 2005/06) "டிரா' ஆனது.
652
கடந்த 1985ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 652 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன்மூலம் இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1993ல் மும்பையில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 591 ரன்கள் எடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
83
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 1977ல் நடந்த டெஸ்டில் 83 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* மும்பையில், 1981ல் நடந்த டெஸ்டில் 102 ரன்களுக்கு "ஆல்-அவுட்டான' இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை பெற்றது.
கவாஸ்கரை முந்துவாரா
இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் முன்னிலை வகிக்கிறார். இவர், 38 டெஸ்டில் 4 சதம், 16 அரைசதம் உட்பட 2483 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் உள்ளார். இவர், 28 டெஸ்டில் 7 சதம், 12 அரைசதம் உட்பட 2423 ரன்கள் எடுத்துள்ளார். இம்முறை கூடுதலாக 61 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், இப்பட்டியலில் முதலிடம் பிடிக்கலாம்.
* இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் கிரகாம் கூச் முதலிடம் வகிக்கிறார். இவர், 19 டெஸ்டில் 5 சதம், 8 அரைசதம் உட்பட 1725 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து கோவர் (24 டெஸ்ட், 1391 ரன்கள்) உள்ளார். தற்போதுள்ள இங்கிலாந்து வீரர்களில் கெவின் பீட்டர்சன் (12 டெஸ்ட், 1243 ரன்கள்) உள்ளார்.
சந்திரசேகர் முதலிடம்
இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் சந்திரசேகர் முதலிடம் வகிக்கிறார். இவர், 23 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இவரை அடுத்து அனில் கும்ளே (19 டெஸ்ட், 92 விக்.,) உள்ளார். தற்போதுள்ள இந்திய பவுலர்களில் ஹர்பஜன் சிங் (13 டெஸ்ட், 43 விக்.,) உள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள் வரிசையில் வில்லிஸ் முன்னிலையில் உள்ளார். இவர், 17 டெஸ்டில் 62 விக்கெட் வீழ்த்தினார். தற்போதுள்ள இங்கிலாந்து பவுலர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (10 டெஸ்ட், 45 விக்.,) உள்ளார்.
181 சதம்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை மோதிய 103 டெஸ்டில், மொத்தம் 181 சதம் அடிக்கப்பட்டது. இதில் இந்தியா சார்பில் 81, இங்கிலாந்து சார்பில் 100 சதம் பதிவு செய்யப்பட்டன. அதிகபட்சமாக இந்தியாவின் டிராவிட், சச்சின் தலா 7 சதம் அடித்தனர். முன்னாள் கேப்டன் முகமது அசார் 6 சதம் அடித்தார். இங்கிலாந்து சார்பில் இயான் போத்தம், கெவின் பீட்டர்சன், கிரகாம் கூச் ஆகியோர் தலா 5 சதம் அடித்தனர்.
அட்டவணை விவரம்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்
அட்டவணை:
தேதி போட்டி இடம்
இன்று (நவ., 15-19) முதல் டெஸ்ட் ஆமதாபாத்
நவ., 23-27 2வது டெஸ்ட் மும்பை
டிச., 5-9 3வது டெஸ்ட் கோல்கட்டா
டிச., 13-17 4வது டெஸ்ட் நாக்பூர்
அணி விவரம்:
இந்தியா
தோனி (கேப்டன்), காம்பிர், சேவக், சச்சின், விராத் கோஹ்லி, புஜாரா, யுவராஜ் சிங், அஷ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ரகானே, முரளி விஜய், டிண்டா.
இங்கிலாந்து
அலெஸ்டர் குக் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், இயான் பெல், டிம் பிரஸ்னன், நிக் காம்ப்டன், ஸ்டீவன் பின், சமித் படேல், கெவின் பீட்டர்சன், மாட் பிரையர், கிரீம் சுவான், ஜோனாதன் டிராட், ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், கிரகாம் ஆனியன்ஸ், இயான் மார்கன், மான்டி பனேசர், ஸ்டூவர்ட் மீக்கர்.