நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
இல்லாதொழிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுலில் இருக்கும்
வரையில் நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள், குற்றச் செயல்கள்
மற்றும் ஏனைய சமூக அநீதிகளை இல்லாதொழிக்க முடியாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் நாட்டில்
சட்டம் ஒழுங்கு பாதிப்பு, நீதியின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள்
இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள்
நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக அதிகாரங்களை பயன்படுத்தத்
தவறியுள்ளதாகவும், தங்களது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதனை இலக்காகக்
கொண்டு செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிறைவேற்று
அதிகார முறைமை குற்றவாளிகளை கட்டுப்படுத்தவன்றி, குற்றவாளிகளுக்கு
அடைக்கலம் வழங்கப் பயன்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல் மோசடிகள்
தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின்
செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என
அவர் குறிப்பிட்டுள்ளார். நாவல சொலிஸ் அரங்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்
கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்
மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் எவ்விதமான
வெளிப்படைத்தன்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.