நாட்டின் ஒழுக்கம் தற்போது, மிகவும்
சீர்குலைந்துள்ளது எனவும் நாடு முழுவதும் குற்றச் செயல்கள்
அதிகரித்துள்ளதாகவும் பெற்றோர், பிள்ளைகள், இளைஞர்கள் இன்று சுதந்திரமாக
வாழவோ, சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளவோ முடியாதளவில், நாடு சீர்கெட்டு
போயுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
ஒழுக்கம் நிறை, ஊழல் மோசடியற்ற நாட்டை
உருவாக்க தம்முடன் சிலர் இணைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புளத்சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்
போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மோசடியான ஆட்சியாளர்களை வீட்டு
அனுப்புவதே எமது ஒரே நோக்கம், இதற்கான அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள
கூடியவர்களை கொண்ட அணி எம்முடன் இணைந்துள்ளது. இதற்கு எதிராக எவராவது
இருப்பாராயின் அவர், இந்த மோசடியான அரசியல் கலாசாரத்தை பாதுகாப்பவராக
இருப்பார்.
நாடு கடன்பட்டுள்ளது. நாட்டில்
அபிவிருத்தித் திட்டங்கள் இல்லை. விவசாயம் அழிந்துள்ளது. குண்டூசி முதல்
அனைத்து பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. தனி நபர் வருமானம்
குறைந்துள்ளது. தனிநபர் வருமானம் 2000 டொலர்கள், இவ்வாறு தனிநபர்
வருமானத்தை பெறுபவர்கள் நாட்டில் பாதி பேர் கூட இல்லை. எனினும் விரைவில்
ஆசியாவின் ஆச்சரியம் உருவாகி விடும் என கூறுகின்றனர் எனவும் சரத்
பொன்சேக்கா கூறியுள்ளார்.
அதேவேளை இந்த கூட்டத்தில் உரையாற்றிய
முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, ஜனாதிபதியை மன்னராக்குவதற்காகவே ஜே.
ஆர். ஜயவர்தன ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்தார். இந்த அரசியல்
அமைப்புச் சட்டத்தின் கீழ் பிரதம நீதியரசர் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக போராட்ட முடியாது. அதற்கு எதிராக போராட வேண்டுமாயின்
பொதுமக்களுடன் இணைய வேண்டும் என சரத் என் சில்வா கூறியுள்ளார்.