ரிசானாவின் நிலைமை ஒரு சிங்கள பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால்..? - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கை சவூதி அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்துள்ளது. வயது குறைந்த நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ரிசானா செய்ததாக சொல்லப்படும் குற்றம் தொடர்பில் தெளிவற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பராமரிப்பில் இறந்த குழந்தையின் மரணம் ஒரு கொலையா அல்லது விபத்தா என்ற சந்தேகம் உலகம் முழுக்க நிலவுகிறது.

எதுவாக இருந்தாலும் வயதுவராத பருவத்தில் செய்யப்பட்டது ஒரு குற்றம் அல்ல. அதற்கு சீர்திருத்தமே நாகரீக உலகு கண்ட பிராயச்சித்தம். வயதுவராத பருவத்தில் செய்யப்பட்ட நிகழ்வை காரணமாக கொண்டு மரண தண்டனை வழங்குவது காட்டுமிராண்டித்தனம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

சகோதரி ரிசானாவின் படுகொலை செய்தியை கேட்டு நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது பெற்றோரையும், சகோதரர்களையும் அதிர்ச்சி, துன்பம் ஆகியவற்றில் இருந்து எல்லாம்வல்ல அல்லா காப்பாற்றவேண்டும்.

வயது குறைந்த பராயத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்துக்கு சவூதி அரசு வழங்கியுள்ள அதிகபட்ச தண்டனையை நாகரீக சமூகம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இதன்மூலம் சவூதி அரசு இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கை படுகொலை செய்துள்ளது என்று நாம் குற்றம் சாட்டுகின்றோம்.

நமது நாட்டு பிரஜையான இந்த இளம் பெண்ணை உயிருடன் மீட்டு தருவதற்கு நமது நாட்டு அரசாங்கத்துக்கு முடியாமல் போய் விட்டது. தொடர்ச்சியாக நமது அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் சொல்லி வந்த உத்தரவாதங்கள் பொய்த்துவிட்டன.

நீண்ட நாள் இழுபறிபட்ட விவகாரம் என்பதால் இது இலங்கை மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த விடயமாகும்.

சவூதி அராபியா ஒரு அரபு முஸ்லிம் நாடு. ரிசானா ஒரு முஸ்லிம் இனத்தை சார்ந்த இஸ்லாமிய சகோதரி. இதே நிலைமை சவூதி நாட்டுக்கு செல்லும் ஒரு சிங்கள பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால், அந்த விவகாரமும் இந்த அளவுக்கு இழுபறிப்பட்டு இருந்தால், இந்நேரம் அதை ஒரு காரணமாக கொண்டு இந்நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிரச்சாரத்தை, பேரினவாதிகள் முன்னெடுத்து இருப்பார்கள் என்பதை, முஸ்லிம் மக்கள் மறந்து விடக்கூடாது.

முஸ்லிம் என்பதற்காக முஸ்லிம் நாடுகள் சலுகை காட்டும் என்றும், தமிழர் என்பதற்காக இந்தியா கருணை காட்டும் என்றும் நம்பிக்கொண்டு இருக்கும் பிற்போக்கு சிந்தனைகளை கைவிட வேண்டிய காலம் வந்துவிட்டது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now