நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!
சட்டக்கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்கும் விடயத்திலோ அல்லது அவர்களுக்கான அனுமதிப் பரீட்சை விடயத்திலோ தலையிடும் அதிகாரம் நீதி அமைச்சருக்கோ, அமைச்சுக்கோ இல்லையென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நுழைவுத் தேர்வு பரீட்சை விடயத்தை இனவாத நோக்குடன் பார்ப்பது தவறு என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. நீதி அமைச்சரின் அறிவிப்பொன்றை முன்வைத்து பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து பேசும்போது, சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சையை பரீட்சைகள் திணைக்களமே நடத்துகிறது. இதன் பெறுபேறுகளின் அடிப்படையில் எத்தனை மாணவர்களை அனுமதிப்பது போன்ற தீர்மானங்களை சட்டக் கல்வி சபையே எடுக்கும். இவ்விடயங்களில் நீதி அமைச்சரோ, அமைச்சோ தலையிட முடியாது.
கல்வித்துறையில் சகல இன மாணவர்களுக்கும் சம கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உறுதியாக உள்ளது. சட்டக்கல்லூரிக்கு அனுமதிபெற்ற மாணவர்களில் 78 பேர் முஸ்லிம் மாணவர்கள். ஒரு பக்கச்சார்பாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சில தரப்பினர் பிரசாரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கின்றனர்.
பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சைக்கு அமைவாக திறமையின் அடிப்படையிலேயே மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் எவ்விதமான பாரபட்சமும் இல்லை. இவ்விடயத்தை இன ரீதியாக நோக்கக் கூடாது. உண்மையில் ஏதாவது தரப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது பற்றி விசாரிக்கப்படவேண்டிய தேவை உள்ளது என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.